பண்டை நாள் - முன்பு; பார் இடந்த - பூமியைத் தன் கொம்பால்குத்தி எடுத்த; வெம்பன்றி - சினம்மிகுந்த வராகத்தையும்; நீர் கடைந்த - (மந்தர மலையாகிய மத்தை அழுத்தாமல் தாங்கியிருந்து) கடலைக் கடந்த; பேர் ஆமை - பெரிய கூர்மத்தையும்; நேர் உளான் - வலிமையால்
நிகர்ப்பவன்; மார்பு இடந்த - இரணியனின் மார்பினைப் பிளந்த; மா எனினும் - நரசிங்கமே வந்ததாயினும்; அவன் - அவ்வாலியின்; தார்கிடந்த தோள் - மாலையணிந்த தோள்களை; தகைய வல்லதோ - அடக்கக் கூடிய வலிமையுடையதாகுமோ? (ஆகாது).
வாலி பூமியைப் பெயர்க்கும் ஆற்றலும், மலையைத் தாங்கும் வன்மையும், கடலைக்கடையும் திறலும் உடையவன் என்பது இதனால் பெறப்பட்டது. 'பண்டை நாள்' என்பது இடைநிலை விளக்காய் முன்னும் சென்று பொருந்தியது. இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கத்திற்கும் வாலியின் தோள் வலிமையை அடக்க இயலாது என வாலியின் தோளாற்றலைக் கம்பர் எடுத்துரைக்கிறார். திருமாலின் அவதாரமான இராமனும் வாலிக்கு எதிர்நின்று போர் புரியாது மறைந்து நின்று வெல்வது
ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. 43
அனந்தனும் - ஆதிசேடனும்; படர்ந்த நீள்நெடும் தலைபரப்பி - ஆயிரமாகப் படர்ந்த நீண்ட பெரிய தலைகளைப் பரப்பிக்கொண்டு; மீது - அத்தலைகளின் மேலே; அடர்ந்து பாரம் வந்துஉற - நெருங்கிப் பாரம் மிகுதியாகப் பொருந்தியிருக்க; இடந்து - (நின்று தாங்க முடியாமல்) கீழே
கிடந்து; இப்புவனம் நாள்எலாம் - இப் பூமியை நாளெல்லாம் (எக்காலத்தும்); தாங்கும் - தாங்குவான்; இக்கிரியை மேயினான் - இந்தக் கிட்கிந்தை மலையில் வாழும் வாலியோ; நடந்து தாங்கும் - நடந்து கொண்டே அப்பூமியைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடையவன்.
பூமியின் பாரத்தைத் தாங்கமாட்டாமல் ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடன் வருந்திக் கிடந்து தாங்கிக் கொண்டிருக்க, ஒரு தலை உடைய வாலி நடந்து கொண்டு எளிதாகத் தாங்குவான் எனக்கூறி ஆதிசேடனை விட வாலி வலிமை மிக்கவன் என்பது உணர்த்தப்பட்டது. இது வேற்றுமை அணி
பொருந்தியது. கிட்கிந்தை அருகில் தோன்றுவதால் 'இக்கிரி' என்றான். அனந்தனும் - உம்மை உயர்வுசிறப்பு. 44
அடலின் வெற்றியாய் - வலிமையால் பெற்ற வெற்றி உடையவனே! தொடர - இடைவிடாமல்; கடல் உளைப்பதும் - கரை கடவாமல் கடல் ஒலித்துக் கொண்டிருப்பதும்; கால் சலிப்பதும் - காற்றுவீசிக் கொண்டிருப்பதும்; மிடல் அருக்கர் - வலிமைமிக்க சூரியர்கள்; தேர்மீது
செல்வதும்- தேர் மீதேறிச் செல்வதும்; அவன் - அவ்வொலி; சுளியும் என்று அலால் - சினம் கொள்வான் என்ற அச்சத்தினால் நிகழ்வதன்றி; அயலின் ஆவவோ - பிறிதொரு காரணத்தால் நிகழ்வனவோ? (அல்ல).
இது வாலியின் கோபத்தை உணர்த்தியது. கடல் முதலியனவெல்லாம் அவன் கோபத்திற்கு அஞ்சியே நடக்கின்றன என்பதாம். உளைப்பது - மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கிநிற்றல்; சலிப்பது - எப்போதும் இயங்கி்க் கொண்டிருப்பது; தேர்மீது செல்வது - தோன்றியும்
மறைந்தும் அந்தந்தக் காலத்திற்கேற்ப நடந்து கொள்ளல். வாலி சினத்திற்கு அஞ்சியே இயற்கையில் செயல்கள் நடைபெறுவதாகக் கூறியதால் ஏதுத்தற்குறிப்பேற்ற அணி. மாதந்தோறும் வெவ்வேறாகச் சூரியர் பன்னிருவர் தோன்றுவர் என்பதால் 'அருக்கர்' எனப் பன்மையால் கூறினான். தொடர - இச்சொல் இறுதிநிலை விளக்கணியாய் ஒலிப்பதும், சலிப்பதும், செல்வதும் என்பவற்றோடு இயையும். இறைவனுக்குக் கட்டுப்படும் இயற்கை, வாலிக்கும் கட்டுப்பட்டு இயங்கும் என்பதால் வாலி இறைவன் போன்ற வரம்பில் ஆற்றலுடையவன் என்பது விளங்கும்.
அல்லால் - அலால் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. 45
ஏழுபத்து வெள்ளம் உள்ள - (அவ்வாலி) எழுபது வெள்ளம் என்கின்ற அளவு உள்ளதும்; மேருவைத் தள்ளல் ஆன - மேருமலையைத் தள்ளக்கூடியதுமான; தோள் அரியின் தானையான் - தோள் வலிமை உள்ளதுமான வானரப்படையை உடையவன்; வள்ளலே - வள்ளல்தன்மை
உடையவனே! அவன் - அவ்வாலி; வலியின் வன்மையால் - வலிமையின் மிகுதியால்; உள்ளம் ஒன்றி - மனம் ஒன்று பட்டு; எவ்வுயிரும் வாழும் - எல்லா உயிர்களும் வாழ்கின்றன;
வாலியின் சேனைச் சிறப்பும் ஆட்சிச் சிறப்பும் இங்குக் கூறப்பட்டுள்ளன. வள்ளல் என்பது இங்கு இராமனைக் குறிக்கும். வெள்ளம் என்றது பேரெண். யானை ஒன்றும், தேரொன்றும், குதிரை மூன்றும் காலாள் ஐந்தும் கொண்டது- பக்தி; பக்தி மூன்று கொண்டது சேனாமுகம்; சேனாமுகம் மூன்று கொண்டது குடமம்; குடமம் மூன்று கொண்டது கணம்; கணம் மூன்று கொண்டது வாகினி;
வாகினி மூன்று கொண்டது பிரதனை; பிரதனை மூன்று கொண்டது சமூ; சமூ மூன்று கொண்டது அநீகினி; அநீகினி பத்துக் கொண்டது அக்குரோணி; அக்குரோணி எட்டுக் கொண்டது ஏகம்; ஏகம் எட்டுக் கொண்டது கோடி; கோடி எட்டுக் கொண்டது சங்கம்; சங்கம் எட்டுக் கொண்டது விந்தம்; விந்தம் எட்டுக் கொண்டது குமுதம்; குமுதம் எட்டுக் கொண்டது பதுமம்; பதுமம் எட்டுக் கொண்டது நாடு; நாடு எட்டு்க் கொண்டது சமுத்திரம்; சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம் என்பர். 46
விளிவை அஞ்சலால் - (வாலி சினம் கொண்டால்) தமக்கு அழிவு நேருமே என்று அஞ்சுவதால்; அவன் - அவ்வாலி; விழைவு இடத்தின் மேல்- விரும்பித் தங்கியிருக்கும் இடத்திற்கு எதிராக; மழை இடிப்பு உறா - மேகம் இடித்து ஒலிக்கமாட்டா; வய வெம் சீயமா - வலிமை மிக்க கொடிய
சிங்கமாகிய விலங்குகள்; முழை இடிப்பு உறா - குகையில் இடிபோல் முழங்கமாட்டா; முரண் வெம் காலும் - வலிய கொடிய காற்றும்; மென் தழை துடிப்புற - அங்குள்ள மெல்லிய இலைகள் நடுக்கம் கொள்ள; சார்வு உறாது - அவற்றின் பக்கத்தில் வராது.
வாலி இருக்கும் இடத்தில் தன் வல்லமையைக் காட்டினால் தமக்கு இறுதி நேரிடும் என்று அவனது வலிமைக்கு அஞ்சி மேகமும், சிங்கமும், காற்றும் அடங்கி நடக்கும் என்பதால் வாலியின் பெருவலி உணர்த்தப்பட்டது. வாலி விரும்பித் தங்கும் இடத்தே இடியோ, இடிபோன்ற முழக்கமோ கேளா; காற்று மென்மையாக வீசும் என அறிய முடிகிறது.
மெய்க் கொள் வாலினால்- தன் உடம்பில் உள்ள வாலினால்; மிடல் இராவணன் - வலிமை மிக்க இராவணனின்; தொக்க தோள் - இருபதாகச் சேர்ந்து விளங்கிய தோள்களை; உற - ஒரு சேரப் பொருந்தும்படி; தொடர்ப்படுத்த நாள் - கட்டிப் பிணித்த அந்நாளில்; புக்கிலாதவும் -
அவன் செல்லாததும்; பொழி அரத்த நீர்- அவ் இராவணன் உடம்பினின்று சொரிந்த இரத்த வெள்ளம்; உக்கிலாத - சிந்தாததும் ஆகிய; வேறு உலகம் யாவதோ - வேறு உலகம் யாது உள்ளதோ?
'புக்கிலாத உலகம், அரத்த நீர் உக்கிலாத உலகம் வேறு யாவது' என்ற வினா. யாதும் இல்லை என்ற மறுதலைப் பொருளைத் தந்தது. நீர்ப்பொருள் ஒற்றுமைப்பற்றி 'அரத்த நீர்' எனப்பட்டது. வாலில் கட்டுண்ட இராவணன் வாலி சென்ற எல்லா உலகங்களிலும் புகுந்தான். அவன் குருதி எல்லா
உலகங்களிலும் சிந்தியது என்பதாம். இதனால் இராவணனை வென்ற வீரமுடையவன் வாலி என்பது பெறப்பட்டது. சிவபூசை செய்து கொண்டிருந்த வாலியை இராவணன் பின்புறமாக வந்து பற்ற எண்ணியபோது, வாலி அவனை வாலினால் கட்டிக் கொண்டு எல்லா உலகங்களிலும் அவன் இரத்தம் சிந்துமாறு சுற்றிவந்து, பின்னர் அவன் வருந்தி வேண்டியதால் விடுத்தான் என்பது
வரலாறு.
மொய்ம்பினோய் - வலிமை உடையவனே! இந்திரன் தனிப்புதல்வன்- இந்திரனின் ஒப்பற்ற மைந்தனாகிய அவ்வாலி; இன் அளிச் சந்திரன் - இனிமையும் குளிர்ச்சியும் கொண்ட சந்திரன்; தழைத்தனைய தன்மையாள் - அனைத்துக் கலைகளுடன் வளர்ச்சி பெற்றது போன்ற
வெண்ணிறத்தைஉடையவன்; அந்தகன் தனக்கு - யமனுக்கும்; அரிய ஆணையான் - கடத்தற்கரிய ஆணையை இடுபவன்; இவனின் - இந்தச் சுக்கிரீவனுக்கு; முந்திவந்தனன் - முன்னே தமையனாகப் (ஒரு தாய்வயிற்றில்) பிறந்தவன்.
இதனால் வாலியின் மேனிநிறத்தையும், ஆணைச் சிறப்பையும் உணர்த்தினான். எமனும் வாலியின் ஆணை வழியன்றிச் செயல்படான் என்பதால் வாலியின் ஆற்றல் புலப்பட்டது. வாலி சுக்கிரீவர்க்குத் தாய் ஒருத்தி; தந்தையர் இந்திரனும் சூரியனுமாகிய இருவர். அந்தகன் தனக்கும் -
உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; தழைத்தனைய என்பதை தழைத்தாலனைய என எச்சத் திரிபாகவாவது; தழைத்ததனைய என்பதன் விகாரமாகவாவது கொள்க. தம் வரலாற்றைத் தாமே கூறிக் கொள்வது தகுதியன்று என்று கருத்துடன், இராமபிரான் வரலாற்றை இலக்குவன் வாயிலாகவும், சுக்கிரீவன் வரலாற்றை அனுமன் வாயிலாகவும் கம்பர் அமைத்துள்ள நயம் காண்க. 49
அன்னவன் - அத்தகையோனாகிய வாலி; எமன் அரசன் ஆகவே- எங்களுக்கு அரசனாக இருக்க; இன்னவன் - இச்சுக்கிரீவன்; இளம்பதம் இயற்றும் நாள் - இளவரசுப் பதவியைத் தாங்கி ஆட்சி புரிந்த நாளில்; முன் அவன் குலப் பகைஞன் - முன்னமே வாலியின் குலப்பகைவனாய் உள்ளவனான; மின் எயிற்று வாள் அவுணன் - மின்னல் போன்று ஒளி வீசும் பற்களை உடைய வாள் போன்ற கொடிய மாயாவி என்னும் அசுரன்; வெம்மையான்- சினம் கொண்டவனாய் (வாலியை); முட்டினான் -எதிர்த்தான்.
முட்டி நின்று- (அவ்வரக்கன்) அவ்வாறு வாலியோடு எதிர்த்துப் போர்செய்த; அவன் முரண் உரத்தின் நேர் - அவனது வலிய ஆற்றலுக்கு எதிரில்; ஒட்ட அஞ்சி - நின்ற போர்செய்வதற்கு அஞ்சி; நெஞ்சு உலைய ஓடினான் - மனம் நடுங்கத் தப்பி ஓடினான்; வட்ட மண்டலத்து - வட்ட
வடிவமாகிய பூமியில்; வாழ்வு அரிது - உயிர் வாழ்தல் அரிது; எனா - என்று எண்ணி; எட்ட அரும் பெரும்பிலனுள் - எவரும் செல்லுதற்கரிய பெரிய பிலத்துவாரத்துள்; எய்தினான் - புகுந்தான்.
வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். மாயாவி நுழைந்த பிலத்தின் அருமை புலப்பட 'எட்டரும் பெரும்பிலன்' என்றான். பிலம் - பூமிக்குள் செல்லும் சுரங்கவழி.பிலன் - பிலம் என்பதன் ஈற்றுப்போலி. 51
எய்து காலை - (அவ்வாறு மாயாவி) பிலத்தினுள் நுழைந்த போது; வெகுளி மேயினான் - சினங்கொண்டவனாகிய வாலி; நோன்மையாய் - (சுக்கிரீவனை நோக்கி) வலிமை உடையவனே! அப்பிலனுள் எய்தி - அவன் நுழைந்த பிலத்தினுள் நுழைந்து; யான்- நான்; நொய்தின் அங்கு- விரைவில் அங்குள்ள; அவற் கொணர் வென்- அவனைப் பிடித்துக் கொணர்வேன்; நீ
சிறிது போழ்து - நீ சிறிது நேரம்; காவல் செய்தி - இப்பிலத்திலிருந்து வேறுவகையில் அவன் தப்பித்துச் செல்லாதவாறு காவல் செய்வாய்; எனா - என்று கூறி; வெய்தின் எய்தினான்- விரைவாக அப்பிலத்துள் சென்றான்.
மாயாவி பிலத்தினுள் புகுந்ததைக் கண்ட வாலி, மிக்க சினங்கொண்டு தம்பியை அப்பிலவாயிலில் காவல் வைத்து மாயாவியைத் தொடர விரைந்து சென்றான் என்பதாம். காவல் காக்கும் வலிமையுடையனாதலின் தம்பியை 'நோன்மையாய்' என விளித்தான். நொய்து, வெய்து என்பன விரைவுப் பொருள 52
வாலியும் - வாலியும்; ஏகி - சென்று; இருது ஏழொடு ஏழ் - பதினான்கு பருவகால வரையிலும்; வேகம் - வேகத்தோடு; வெம்பிலம் தடவி- கொடிய பிலத்தினுள்ளே தேடிப் பார்த்து; வெம்மையான் - கொடுந்தன்மையுடைய அசுரனை; மோக வென்றி மேல் - (வெல்லுதலாகிய)
விரும்பத்தக்க வெற்றிமேல் கருத்துடையவனாய்; முயல்வின் வைகிட - அம்முயற்சியின் ஈடுபட்டிருக்க; துணை - தம்பியான சுக்கிரீவன்; சோகம் எய்தினன் - துன்பம் அடைந்தவனாய்; துளங்கினான் - கலங்கினான்.
பிலத்துள் சென்ற வாலி அசுரனைத் தேடுதலும், தேடிக்கொண்டு பிடித்தலும், பிடித்துப் போர்செய்தலும் ஆகிய செயல்களில் ஈடுபட்டு இருபத்தெட்டு மாதங்கள் வெளிவராததனால் 'வாலிக்கு என்ன இடுக்கண் நேர்ந்ததோ' எனக் காவல் காத்து நின்ற சுக்கிரீவன் கலங்கினான். இருது -
இரண்டு மாத காலங்களைக் கொண்டது. ஏழொடு ஏழ் - பதினான்கு பருவங்கள் - இருபத்தெட்டு மாதகாலம். துணை - சுக்கிரீவன். இருபத்தெட்டு மாதங்கள் கழிந்தமையால் வாலி இறந்திருப்பானோ என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு ஏற்படலாயிற்று. வெற்றிமேல் கொண்ட மோகத்தால் 'மோகவென்றி' ஆயிற்று.
53
அழுது அழுங்குறும் - புலம்பி வருந்துகின்ற; இவனை - இச்சுக் கிரீவனை; அன்பினில் தொழுது இரந்து - (நாங்கள்) அன்போடு வணங்கி வேண்டி; எழுது வென்றியாய் - நூல்களில் எழுதத்தக்க வெற்றியை உடையவனே! நின்தொழில் இது ஆதலால் - இளவரசனாகிய நினக்குரிய
தொழில் இவ்வரசு செய்தலே ஆதலின்; அரசு செய்க - அரசாட்சியை ஏற்றுக்கொள்வாயாக; என - என்று சொல்ல; பரியும் நெஞ்சினான்- (வாலியின் பிரிவால்) வருந்துகின்ற மனமுடையவனான சுக்கிரீவன்; இது பழுது- இது குற்றமாகும்; என்றனன் - என்று உரைத்தான்.
இரத்தல் - வேண்டுதல் பொருளில் வந்தது. நெடுநாள் கழிந்தும் வாலி மீண்டுவராததால், வாலிக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ எனக் கருதியவராய், இளவரசனே அரசனுக்குப் பின்னர் அரசு பெற வேண்டும் என்ற முறைமை கருதி 'நின் தொழில் இது ஆதலால்' என்றனர். பழுது இது என்றது -
வாலிக்கரிய அரசைத் தான் ஆளுதல் குற்றம் என்றது. இதனால் சுக்கிரீவனுக்கு அரசு புரியும் விருப்பமின்மை புலப்படும்.
என்று - என்று சொல்லி; தானும் - சுக்கிரீவனும்; அவ்வழி - வாலிசென்ற அவ்வழியே; இரும்பிலம் சென்று - அநதப் பெரிய பிலத்தினுள் சென்று; முன்னவன் தேடுவேன் - வாலியாம் என் தமையனைத் தேடிப் பார்ப்பேன்; அவற் கொன்றுளான் தனை - (அவன் இறந்து போயிருந்தால்)
அவனைக் கொன்றவனாகிய மாயாவியை; கொல்வன் - (போர்செய்து) கொல்வேன்; அன்று எனின் - கொல்ல இயலவில்லை எனின்; பொன்றுவேன்- (போரில்) இறப்பேன்; எனா - என்று கூறி; புகுதல்
மேயினான் - அப்பிலத்தில் நுழையப் புகுந்தான்.
முன்னவன் என்றது வாலியை. வாலி சென்ற பிலத்தினுள் புகுந்து வாலியைத் தேடுவது, அசுரன் வாலியைக் கொன்றிருப்பின் அவனைக் கொல்வது, அது இயலாவிடின் மடிவது எனச் சுக்கிரீவன் தன் மனத்துணிவை வெளிப்படுத்தினான். பிலத்தினுள் நுழைய மேயது வாலிமாட்டு அவன் கொண்டுள்ள அன்பையும் எடுத்துக் காட்டியது. அவற் கொன்றுளான் என
உயர்திணை ஈறு இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் விகாரம் உற்றது.
55
வல்லவர் - அறிவும் சொல்வன்மையும் உடைய அமைச்சர்கள்; தடுத்து- சுக்கிரீவன் பிலத்தினுள் நுழையாதவாறு தடுத்து; தணிவு செய்து- அவனைச் சமாதானப்படுத்தி; நோய் கெடுத்து - அவன் துயரமாகிய நோயைப்போக்கி; மேலையோர் கிளத்து நீதியால் - முன்னையோர்
கூறியுள்ள நீதிமுறையைக் கொண்டு; அடுத்த காவலும் - அடுத்து வரத்தக்க அரசாட்சியை; அரிகள் ஆணையால் - மற்ற வானரர்களின் கட்டளைப்படி; கொடுத்தது உண்டு- இவனுக்குக் கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம் - (ஆட்சியை) இவன் விரும்பித் தானாக கைக்கொண்டானோ? (இல்லை).
நோய் - அண்ணனுக்கு யாது ஆயிற்றோ என்ற கலக்கத்தால் ஏற்பட்ட மனத்துயரம்; வல்லவர்களின் கட்டளையை மீற முடியாமல் சுக்கிரீவன் அரசை ஏற்றுக்கொண்டானேயன்றி, அரசு பெறவேண்டும் என்ற வேட்கையால் அன்று எனக் கூறிச் சுக்கிரீவனது தவறின்மையைத் தெளிவாகக் காட்டினான். சுக்கிரீவன் விரும்பி நாட்டைப் பெற்றதாக வாலி நினைத்து அவனைத் துன்புறுத்தியதை எண்ணி, 'இவன் கொண்டனன் கொலாம்' என்றான். இவன் கொண்டதில்லை என்பது கருத்தாகும்.
அன்ன நாளில் - அங்ஙனம் சுக்கிரீவன் அரசேற்றுக் கொண்ட அந்த நாளில்; மாயாவி - மாயாவி; அப்பிலத்து - அந்தப் பிலத்திலிருந்து; இன்ன வாயில் ஊடு- இவ்வாயில் வழியாக; எய்தும் என்ன - இங்கு வருவான் என்று அஞ்சி; யாம் - நாங்கள்; பொன்னின் மால் வரை பொருப்பு - பொன் மயமான பெரிய மேருமலையாகிய மலையை மட்டும்; ஒழித்து - விடுத்து; வேறு உன்னு குன்று எலாம் - வேறு மனத்தால் எண்ணக்கூடிய மலைகள் அனைத்தையும்; உடன் அடுக்கினேம் - ஒன்று சேரக்கொண்டுவந்து அப்பில வாயிலில் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கினோம்.
வாலியைக் கொன்ற மாயாவி, சுக்கிரீவனையும் கொல்ல இவ்வாயில் வழியே வருவான் என்ற அச்சத்தால் அவன் வராவண்ணம் பிலவாயிலை அடைத்துவிட்டோம் என்று வாயில் அடைத்ததற்குரிய காரணத்தைக் கூறினான்அனுமன். வாலி, தான் வராமல் இருக்கவேண்டி அடைத்ததாகக்குற்றம் சாட்டினான் ஆதலின், இது கூற வேண்டியதாயிற்று.
அவ்வழிச் சேமம் செய்து - அந்தப் பிலத்து வழியை (குன்றுகளால்அடைத்து) பாதுகாவலைச் செய்து; செங்கதிர்க் கோமகன்தனை - சிவந்தகதிர்களை உடைய சூரியன் மைந்தனாம் சுக்கிரீவனை; கொண்டு வந்து - அழைத்துக்கொண்டு வந்து; யாம் - நாங்கள்; மேவு குன்றின் மேல் -
எங்கள் இருப்பிடமாகிய கிட்கிந்தை மலைமேல்; வைகும் வேலைவாய்-தங்கியிருந்த காலத்தில்; அவனை - அந்த மாயாவியை; அன்னவன் -அவ்வாலி; ஆவி உண்டனன் - கொன்றான் 58
ஒளித்தவன் - (பிலத்தில் புகுந்து) ஒளித்தவனாகிய மாயாவியின்; உயிர்க் கள்ளை உண்டு - உயிராகிய கள்ளை உண்டு; உளம் களித்த வாலியும் - மனம் களிப்படைந்த வாலியும்; கடிதின் எய்தினான் - விரைவாகப் பிலத்து வாயிலை அடைந்து; விளித்து நின்று - (வாயில் அடைபட்டிருந்ததால்) சுக்கிரீவனை அழைத்து நின்று; வேறு உரை பெறான்- மறுமொழி ஒன்றும் பெறாதவனாய்; இளவலார் - 'என் தம்பியார்; இருந்து - வாயிலில் இருந்து; அளித்தவாறு நன்று- காவல் செய்தவிதம் நன்று; எனா- என்று சொல்லி. . . .
கள் உண்டார்க்குக் களிப்பை உண்டாக்குதல் போல மாயாவியைக் கொன்ற வெற்றியும் களிப்பைத் தந்ததால் மாயாவியின் உயிரைக் கள்ளாக உருவகித்தான். அந்தக் கள்ளை உண்டால் வாலியின் மனமும் போதையுற்றது. சுக்கிரீவனுடைய உண்மைநிலை அறியாது மயங்கி உணர்ந்தமைக்கு
இக்களிப்பே காரணம் என்பதை உணர்த்தவே 'களித்த வாலியும்' என்றான். இளவலார் - பண்படியாகப் பிறந்த பெயர்; அல் - பெயர்விகுதி. இகழ்ச்சி பற்றிப் பலர்பாலாக வந்தது. 'நன்று' என்பதும் நன்றன்று என்ற குறிப்பையே உணர்த்தியது. 'செய்தி காவல் நீ சிறிது போழ்து' என்ற வாலியின்
கட்டளைக்குப் பணிந்திருக்க வேண்டியவன், காவலை விட்டதோடு, வாயிலையும் அடைத்தது பொருந்தாத செயல் எனக்கருதியதால் 'இருந்து அளித்தவாறு நன்று' என இகழ்வுபடப் பேசினான்வாலி. 59
அவன்- அவ்வாலி; வால் விசைத்து- தன் வாலை வேகமாகத் தூக்கி; வான் வளி நிமிர்ந்தென - வானத்தின்கண் பெருங் காற்று எழுந்தாற்போல; கால் விசைத்து - தன் காலை வீசி; கடிதின் என்றலும்- வேகமாய் உதைத்த அளவில்; பெரிய வெற்பு எலாம் - (பிலத்தை அடைத்திருந்த) பெரிய மலைகள் எல்லாம்; நீல் நிறத்து - நீல நிறமுடைய; விண் நெடு முகட்டவும்
- ஆகாயத்தின் உயர்ந்த உச்சியை அடைந்தனவும்; வேலை புக்கவும் - கடலில் விழுந்தனவும் ஆயின.
ஆயின எனும் வினை வருவித்துக்கொள்ளப் பட்டது. விசை - வேகம். நீலம் - நீல் என்றது கடைக்குறை. முட்ட, புக்க என்பன பலவின்பால் குறிப்பு வினை - யாலணையும் பெயர்கள்.வாலியின் காலால் உதைக்கப்பட்ட மலைகளில் உயரச் சென்றவை விண்ணின் உச்சியை அடையவும், தாழச் சென்றவை கடலிலும் விழுந்தன.விசையுடன் ஒன்றைத் தாக்குகையில் விலங்குகள் தம் வாலை வேகமாக நிமிர்த்துக்கொள்ளும் இயல்பு இங்குக் கூறப்பெற்றது. 60
அவன் - வாலி; ஏறினான் - (பிலத்தினின்று) ஏறியவனாய்; எவரும் அஞ்சுற - எல்லோரும் அஞ்சும்படி; சீறினான் - கோபத்தால் சீறிக்கொண்டு; நெடுஞ்சிகரம் எய்தினான்- பெரிய மலை உச்சியை அடைந்தான்; வேறு இல் - மனத்தில் வேறுபாடு இல்லாத; ஆதவன் புதல்வன் - சூரியன்
மைந்தனும்; மெய்ம்மை ஆம் ஆறினானும் - உண்மை நெறியில் நடப்பவனுமான சுக்கிரீவன்; வந்து அடிவணங்கி னான் - (தமையன்) முன்வந்து அவன் பாதங்களில் வணங்கினான்.
வாலி வேகத்தோடு மலைகளைத் தள்ளிச் சினத்தொடு கிட்கிந்தையை அடைந்தபோது, மனத்தில் களங்கம் இல்லாத காரணத்தால் சுக்கிரீவன் வாலியின் பாதங்களை வணங்கினான். வல்லார் கூறிய நெறிப்படியே ஆட்சியை ஏற்றவன் ஆதலின் 'மெய்ம்மை ஆம் ஆறினான்' என்றார். சுக்கிரீவன் வாலிக்கு அஞ்சி ஒளிய வேண்டிய காரணம் இன்மையால் எதிர்வந்து வணங்கினான். 61
வணங்கி - அவ்வாறு வணங்கி; அண்ணல் - அண்ணலே; இறைவ -தலைவா! நின் வரவு இலாமையால் - நீண்டகாலம் உன் வருகை இல்லாததால்; உணங்கி - மனம் வருந்தி; உன் வழிப்படர - உன் பின்னர்ப் பிலத்துவழிச் செல்ல; உன்னுவேற்கு - கருதிய எனக்கு; நும்முடைக்கணங்கள் - நும் அமைச்சராகிய வானரக் கூட்டத்தார்; இணங்கர்
இன்மையால்- சம்மதிக்காமையோடு; காவல் உன் கடன்மை - 'எங்களை ஆட்சி புரிந்து பாதுகாப்பது உனது கடமையாகும்'; என்றனர் - என்று கூறினர்.
இச்செய்யுளில் 'அண்ணல்' என்றது முதல் அடுத்த செய்யுளில் 'பொறாய்' என்னும் அளவும், முன்னே வாலியினிடத்துச் சுக்கிரீவன் பேசியதை அனுமன் அறிந்து கூறியதாகும்.
தன்னினும் முன்னவனாதலின் 'அண்ணல்' என்றும், யாவர்க்கும் அரசனாதலின் 'இறைவ' என்றும் சுக்கிரீவன் விளித்தான். சுக்கிரீவன் நேர்மையான வழியில் செல்பவனாதலின், வாலி கேட்பதற்கு முன்னரே தன்மீது குற்றம் இல்லை என்பதை உணர்த்துதற்கு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு
வாலியிடம் கூறலாயினன். வாலிக்கு அமைச்சராய் இருந்தோர் கூறியதால் அரசேற்க நேர்ந்தது என்பதால் 'நும்முடைக் கணங்கள்' என்றான். தான் உண்மையில் வாலி சென்ற வழியிலே செல்ல நினைத்ததை 'உன் வழிப் படர உன்னுவேற்கு' என்ற தொடரால் உணர்த்தினான். 62
பூண் நிலாவு தோளினை - அணிகள் அசைந்து விளங்கும் தோள்களை உடையவனே! ஆணை அஞ்சி - வானரர்களின் கட்டளையை மறுப்பதற்கு அஞ்சி; இவ் அரசை எய்தி - இந்த அரசாட்சியை ஏற்று; வாழ் - வாழ்ந்து வந்த; நாண் இலாத - நாணம் இல்லாத; என் நவையை - என் குற்றத்தை;
பொறாய் - பொறுத்துக் கொள்வாய்; நல்குவாய் - அருள்வாய்; என - எனச் சுக்கிரீவன் வேண்டவும்; கோணினான் - (வாலி) மனம் மாறுபட்டவனாய்; நெடுங்கொடுமை கூறினான் - மிகக் கடுமையான சொற்களைச் சொன்னான்.
வானரர்களின் விருப்பப்படி நடந்துகொண்ட செயல் அண்ணன் தன்னைத் தவறாக நினைப்பதற்கு இடம் அளித்ததால் 'நாணிலாத' என்றான். 'தகாதன செய்தற்கண் உள்ளம் ஒடுங்குதல்' எனப் பரிமேலழகர் நாணத்திற்கு இலக்கணம் சொன்னது கருத்தக்கது. சிறிது காலம் வாலிக்குரிய அரசை
ஆண்டதால் 'நவை' என்று குறிப்பிட்டான். தன்னையும் அறியாது நிகழ்ந்த செயலைக் கூறிப் 'பொறாய், நல்குவாய்' என மன்னிப்பு வேண்டினான். இங்ஙனம் நிகழ்ந்தது கூறி வேண்டியும் வாலி சினம் கொண்டான் ஆதலின்குற்றம் வாலியுடையது என்பதை அனுமன் உணர்த்தினான். 63
அடல் கடந்த தோள் - பகைவரின் வலிமையைப் போரில் கடந்து வெற்றிபெற்ற தோள்களை உடைய; அவனை அஞ்சி - வாலிக்குப் பயந்து; வெங்டல் கலங்கி - கொடிய குடல் கலங்கி; எம் குலம் ஒடுங்க - எம் வானர இனம் முழுமையும் அஞ்சி ஒடுங்கிநிற்க; முன் கடல் கடைந்த-
முன்பு திருப்பாற்கடலைக் கடைந்த; அக்கரதலங்களால்- அந்தக் கைகளால்; உடல் கடைந்தனன் - (சுக்கிரீவனது) உடலைத் தாக்கிக் கலக்கினான் (வாலி); இவன் உலைந்தனன் - சுக்கிரீவன் பெரிதும் வருந்தினான்.
வாலியின் சினத்திற்குக் குரக்கினம் முழுவதும் குடல் கலங்கி அஞ்சி நடுங்கின. பாற்கடலைக் கடைந்த வாலியின் கைகளுக்குச் சுக்கிரீவன் உடம்பைக் கலக்குதல் எளிது. ஆதலின் 'கடல் கடைந்த அக்கரதலங்களால் உடல் கடைந்தனன்' என்றான். உடல் கடைதல் - உடம்பைத் தாக்கி உறுப்புகள் கலங்குமாறு செய்தல். கொடுமையான வார்த்தைகளைப் பேசியதோடு வாலி சுக்கிரீவனைத் தாக்கவும் செய்தான் என அவன் கொடுமையை இராமனுக்கு அனுமன் உணருமாறு கூறினான். உடல் கடைதல்; இதன்கண் அமைந்த (வினைப்) படிமம்கருதத்தக்கது. 64
பற்றி - வாலி சுக்கிரீவனைப் பிடித்துக் கொண்டு; பழியை அஞ்சலன் - (தம்பியை வருத்துவதால் ஏற்படும்) பழிக்க அஞ்சாதவனாய்; வெஞ்சினம் முற்றிநின்ற - கொடிய கோபம் மிக்கு நின்ற; தன் முரண் வலிக்கையால் - தனது மிக்க வலிமையுடைய கையால்; எற்றுவான் - மோதுவதற்கு; எடுத்து எழுதலும் - உயரத் தூக்கி எழுந்த அளவில்; அற்றம் ஒன்று பெற்று - அவன் சோர்ந்திருக்கும் சமயம் ஒன்று பெற்று; இவன் பிழைத்து - இந்தச் சுக்கிரீவன் தப்பிப்பிழைத்து; அகன்றனன் - அவ்விடம் விட்டு அகன்று ஓடினான்.
வாலி, தன்னைப் பழிப்பரே என்ற எண்ணம் சிறிதுமின்றித் தன் தம்பியை மோதிக் கொல்ல, உயரே எடுத்த அளவில் சுக்கிரீவன் வாலி சிறிது அயர்ந்திருந்த சமயம் நோக்கித் தப்பி ஓடி வந்துவிட்டான் என்பதாம். முரண் வலி - ஒரு பொருட்பன்மொழி. மிக்க வலிமை. சுக்கிரீவனின் அச்சத்தைப்
பிழைத்தால் போதுமென ஒடி அகன்ற நிலை உணர்த்தும். பழிக்கு அஞ்சாத வாலியின் கொடுமை உணர்த்தப்பட்டது. 65
வாலிக்கு அஞ்சிய, சுக்கிரீவன் இரலை மலையில் வாழ்தல்
எந்தை - எம் ஐயனே! அவன் - அவ்வாலி; எயிறு அதுக்குமேல் - தன் பற்களைக் கடித்துக் கோபிப்பானாயின்; அந்தகற்கும் - யமனுக்கும்; ஓர் அரணம் - (பிழைத்துவாழ) பாதுகாப்பான ஓர் இடம்; இல்லை - இல்லை; முந்தை உற்றது - முன்னே (மதங்கமுனிவரால்) அடைந்ததாகிய; ஓர் சாபம்உண்மையால் - ஒரு சாபம் உள்ளதாதலின்; இந்த வெற்பின் வந்து - இந்தமலையில் வந்து; இவன் இருந்தனன் - சுக்கிரீவன் இருப்பானாயினன்.
வாலியின் சினத்திற்கு இலக்கானவர் யாவரேயாயினும் தப்பிப் பிழைப்பதற்கு உரிய இடமில்லை. எல்லா உயிர்களையும் கவரும் யமனுக்கும் பிழைக்க இயலாது என்பதால் வாலியின் வலிமை உணர்த்தப்பட்டது. அந்தகற்கும் - உம்மை, உயர்வு சிறப்பும்மை. எயிறு அதுக்குதல் - கோபக்குறியை உணர்த்தும் மெய்ப்பாடு. காரியம் காரணத்தின் மேல் நின்றது. வாலி, மதங்க முனிவரால் பெற்ற சாபத்தில் இம்மலைப் பகுதிக்கு வரஇயலாது.அதனால் சுக்கிரீவன் இம்மலையை அரணாகக் கொண்டு இதுகாறும் உயிர் பிழைத்திருந்தான் என்பதை உணர்த்தினான் அனுமன். வாலிக்கு மதங்க
முனிவர் இட்ட சாபத்தைத் துந்துபிப் படலத்தால் அறியலாம். அந்தகன் - உயிர்கட்கு அழிவைச் செய்பவன்;யமன். 66
எம் கடவுள் - எம் தெய்வமே! உருமை என்று - உருமை என்றுபெயர்பெற்று; இவற்கு உரிய - இச்சுக்கிரீவனுக்கு உரிய; தாரம் ஆம் - மனைவியாய் இருந்த; அருமருந்தையும்- கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போன்றவளையும்; அவன் - விரும்பினான் - அவ்வாலி விரும்பிக் கவர்ந்து
கொண்டான்; இவன் - சுக்கிரீவன்; இருமையும் துறந்து- அரசச் செல்வத்தையும் மனைவியையும் இழந்து; இருந்தனன் - இம்மலையில்இருந்தான்; இங்கு இது கருமம் - இங்குக் கூறிய இதுவே நடந்த
செய்தியாகும்; என்றனன் - என்று அனுமன் உரைத்தான்.
உருமை - சுக்கிரீவன் மனைவி. வாலி சுக்கிரீவர்களுக்கு மாமனும், தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மகனுமான தாரன் என்னும் வானர வீரனின் மகள். ருமை என்னும் வடசொல் தமிழில் உருமை ஆயது. அருமருந்தையும் - உம்மை உயர்வு சிறப்பொடு இறந்தது தழுவிய எச்சப்பொருளும் அமைந்தது. வாலி தனக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டதோடு, சுக்கிரீவனுக்கே உரியமனைவியையும் கவர்ந்தான் என வாலியின் கொடுமை கூறப்பட்டது. அருமருந்து - கிடைத்தற்கரிய தேவாமிர்தம். உவமை ஆகுபெயராய் உருமையைக் குறித்தது.
67
இராமன் சினந்து, வாலியைக் கொல்வதாகச் சூளுரைத்தல் கலித்துறை
பொய் இலாதவன் - பொய் கூறுதலை அறியாத அனுமன்; வரன் முறை - கூறவேண்டிய முறைப்படி; இம்மொழி புகல - சுக்கிரீவனைப் பற்றிய செய்திகளைக் கூற; ஐயன் - தலைவனும்; ஆயிரம் பெயருடை- ஆயிரம் திருநாமங்களை உடைய; அமரர்க்கும் அமரன் - தேவர்களுக்கு எல்லாம் மேம்பட்ட தேவனுமான இராமபிரானின்; வையம் நுங்கிய - (முன்பு பிரளய காலத்தில்) உலகம் முழுவதையும் விழுங்கிய; வாய் இதழ் துடித்தது - வாயின் உதடுகள் கோபத்தால் துடித்தன; கண்கள் - அவனது கண்களாகிய; செய்ய தாமரை மலர்- சிவந்த தாமரை மலர்கள்; ஆம்பல் அம்போது என - செவ்வாம்பல் மலர் போல; சிவந்த- சிவந்தன.
வாலி சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்த செய்தியினையும் மறைக்காது உரைத்தமையால் 'பொய் இலாதவன்' என்றார். 'மெய்ம்மை பூண்டான்' (4801) என்று பின்னரும் அனுமன் கட்டப்படுவான். அறத்திற்கு மாறாக வாலி நடந்து கொண்டான் என அறிந்ததும் தாமரை மலர்க்கண்கள் மேலும் சிவந்ததால் 'ஆம்பல் போது எனச்சிவந்த' என்றார். தாமரை மலரின் செம்மையினும் செவ்வாம்பல் மலர் செம்மை மிக்கது என அறிய முடிகிறது. 68
ஈரம் நீங்கிய - அன்பு நீக்கிய; சிற்றவை - சிறிய தாயாகிய கைகேயி; சொற்றனள் என்ன - சொன்னாள் என்று; ஆரம் வீங்கு தோள் - முத்துமாலை அணிந்த பருத்த தோள்களை உடைய; தம்பிக்கு - தம்பியாகிய பரதனுக்கு; தன் அரசு உரிமைப் பாரம் - தனக்கே உரித்தான அரசபாரத்தை;
ஈந்தவன் - அளித்தவனான இராமன்; பரிவு இலன் ஒருவன் - ''அன்பில்லாத ஒருவன்; தன் இளையோன் தாரம் - தன் தம்பியின் மனைவியை; வௌவினன்- கவர்ந்து கொண்டான்; என்ற சொல் - என்ற வார்த்தையை; தரிக்குமாறு உளதோ - (கேட்டுப்)பொறுத்திருக்கும் தன்மை உண்டாகுமோ? (ஆகாது).
இராமன் மாட்டு இயல்பாக அன்பு கொண்ட கைகேயி கூனியின் சூழ்ச்சியால் மாறியதால் 'ஈரம் நீங்கிய சிற்றவை' என்றார். ஆட்சியுரிமை மூத்தவனான இராமனுக்கே உரித்து ஆதலின் 'தன் அரசுரிமை' எனப்பட்டது. இச்செய்யுளால் தம்பி மாட்டு அன்பில்லாது, அவன் தாரத்தையும் கவர்ந்த
கொடிய செயலே மனைவியை இழந்த இராமன் வாலிபால் கொண்ட பகைமைக்கு முதன்மைக் காரணமாய் முன்னின்றது என்பதாம். இப்பாடல்கவிக்கூற்று. 69
உலகம் ஏழினோடு ஏழும் - பதினான்கு உலகில் உள்ளோர் யாவரும்; வந்து - திரண்டு வந்து; அவன் உயிர்க்கு உதவி - வாலியின் உயிரைக் காப்பதற்கு உதவிபுரிந்து; விலகும் என்னினும் - என்னைத் தடுக்குமாயினும்; வில்லிடை வாளியின் - என் வில்லில் பூட்டிய அம்பினால்; வீட்டி -
அவனை அழித்து; தலைமையோடு - வானரங்களுக்குத் தலைவனாகும் அரசாட்சியோடு; நின் தாரமும் - உனது மனைவியையும்; உனக்கு இன்று தருவேன் - உனக்கு இப்பொழுதே மீட்டுத் தருவேன்; புலமையோய் - அறிவில் சிறந்தவனே! அவன் உறைவிடம் காட்டு - அவன் வசிக்கும்
இடத்தைக் காண்பிப்பாய்; என்று புகன்றான் - என்று (சுக்கிரீவனிடம் இராமன்) கூறினான்.
பதினான்கு உலகில் உள்ளார் வந்து தடுப்பினும் வாலியைக் கொன்று ஆட்சியையும், மனைவியையும் மீட்டுத் தருவது உறுதி என இராமன் சுக்கிரீவனுக்கு உரைத்தான். முன் தண்டக வனத்து முனிவர்களிடத்தும் 'சூர் அறுத்தவனும், சுடர்நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும், ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர், வேர் அறுப்பென், வெருவன்மின் நீர்' (2652) என இராமன் கூறியுள்ளமை காணலாம். அரச நீதிக்கு ஏற்பத் துணையையும் காலத்தையும் நோக்கி அடங்கியிருந்த சுக்கிரீவன் அறிவுடைமை பற்றிப் 'புலமையோய்' என விளித்தான். உலகம் - இடவாகுபெயர்; விலக்கும் என்பது எதுகை நோக்கி 'விலகும்' என விகாரப்பட்டு நின்றது. 'இன்று
தருவென்' என்றது கால வழுவமைதி; உறுதி குறித்தது. 'இன்றே தந்தேன்' என்று சொல்லியிருந்தாலும் அதுவே. 70
பேர் உவகைக் கடல் - (இராமன் கூறியதைக் கேட்ட மாத்திரத்தில்) பெரிய மகிழ்ச்சியாகிய கடல்; பெருந்திரை எழுந்து - பெரிய அலைகளோடு பொங்கி எழுந்து; இரைப்ப - ஒலிக்க; அழுந்து துன்பினுக்கு - தான் அழுந்திடக் கிடந்த துயரமாகிய கடலுக்கு; அக்கரை கண்டனன் - எல்லை கண்டவனை; அனையான் - ஒத்து விளங்கும் சுக்கிரீவன்; இனி, வாலிதன் வலி - ''இனி வாலியின் வலிமை; வீழ்ந்ததே- அழிந்ததேயாம்''; என விரும்பா- என்று விருப்பமுற்று; மொழிந்த வீரற்கு- (தன்னிடம்) பேசிய இராமனிடம்; யாம் எண்ணுவது உண்டு-'நாங்கள் ஆலோசிக்க வேண்டுவது
ஒன்றுளது'; என மொழிந்தான் - என்று சொன்னான்.
இராமன் சொல்லைக் கேட்டதும் சுக்கிரீவன் பெரிதும் மகிழ்ந்தான் என்பதால் 'பேருவகைக்கடல் பெருந்திரை இரைப்ப' என்றார். பேருவகைக்கடல் என்பது உருவகம். 'அக்கரை' என்றதால் துயரமாகிய கடலுக்கு என உருவமாகக் கொள்ளல் வேண்டும். இராமன் உரையால் வாலியை இறந்துபட்டவனாகவே சுக்கிரீவன் உணர்ந்ததால் 'விழுந்ததே வாலி தன் வலி' எனப்பேசினான். விழுந்ததே - தெளிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாய் வந்த கால வழுவமைதி. 71
அமைச்சர்களோடு கூடிச் சுக்கிரீவன் சிந்திக்க, அனுமன் பேசுதல்
இரவி தனையன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; அனைய ஆண்டு உரைத்து - அவ்வாறு அங்குச் சொல்லிவிட்டு; நினைவும் கல்வியும் - எண்ணமும் கல்வியும்; நீதியும் சூழ்ச்சியும்- நீதிநெறிகளும் ஆய்வுத்திறமும்; நிறைந்தார் - நிறைந்தவர்களாகிய; அனுமனே முதலிய அமைச்சர் - அனுமன் முதலான அமைச்சர்கள்; எனையர் - எத்துணைபேர் இருந்தனரோ; அன்னவரோடும் - அத்தனை பேருடனும்; வேறு இருந்தனன்- வேறிடத்தில் (ஆலோசனை செய்ய) இருந்தான்; அவ்வழி - அப்பொழுது; சமீரணன் மகன் - வாயு மைந்தனாகிய அனுமன்; உரைதருவான் - பேசலாயினான்.
வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனுக்கு உண்டோ, இல்லையோ எனச் சுக்கிரீவன் ஐயுற்று அதைப்பற்றி ஆலோசிக்க அனுமன் முதலிய அமைச்சர்களை அழைத்துக் கொண்டு தனியிடத்தே சென்றான். அமைச்சர்களுக்குச் செயல்படுவதற்கேற்ற எண்ணமும், அறிவுத்திறனும், நீதிநெறியும், அரசன் ஆக்கத்திற்குத் தக்க சூழ்ச்சியும் வேண்டுதலின் அந்நான்கினையும் உடைய அமைச்சர் என்றார். அனுமனே - ஏகாரம் தேற்றப்பொருளில் மற்றையோரினும் அவனுக்குள்ள சிறப்பை
உணர்த்துவதாகும்.
உரவோய் - வலிமை உடையவனே! உன்தன் உள்ளத்தின் - உன் மனத்தில்; உள்ளதை - உள்ள கருத்தை; உன்னினேன் - (யான்) ஊகித்து அறிந்து கொண்டேன்; அன்ன வாலியை - அத்தகைய வலிமை வாய்ந்த வாலியை; காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் - யமனுக்குக் கொடுக்கும்படியான ஒப்பற்ற வலிமை; இன்ன வீரர்பால் இல்லை - இந்த வீரர்களிடத்தில் இல்லை; என்று அயிர்த்தனை - என்று ஐயம் கொண்டாய்; இனி யான் சொன்ன கேட்டு- இனி யான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு; அவை கடைப்பிடிப்பாய் - அவற்றை உறுதியாகக் கொள்வாய்;
எனச் சொன்னான் - என்று சொல்வானாயினன்.
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரவல்ல அனுமன் தன் அறிவால் சுக்கிரீவன் மனத்தில் கொண்ட ஐயத்தை உணர்ந்துகொண்டான். காலனுக்கு அளிப்பது - கொல்வது என்னும் பொருளைத் தருவது. அன்ன வாலி என்றது. எதிர்த்தார் வலிமையில் பாதியைத் தான் பெறுதற்குரிய வரம் பெற்ற வாலி என அவன் பெருமையைக் கூறியதாகும். இன்ன வீரர் - இங்கு வந்துள்ள இராமலக்குவரைக் குறிக்கும்.
தடக்கையில் - (இராமனது) பெரிய கைகளிலும்; தாளில் - பாதங்களிலும்; சங்கு சக்கரக் குறி உள - சங்கு சக்கரங்களின் ரேகைகள் உள்ளன; இத்தனை இலக்கணம் - இத்தனைச் சிறந்த இலக்கணம்; எங்கும் யாவர்க்கும் இல்லை - எவ்வுலகத்திலும் யார்க்கும் இருந்த தில்லை; செங்கண் வில் கரத்து - சிவந்த கண்களையும், வில்லேந்திய கரத்தையும் உடைய; இராமன் - ; அத்திரு நெடுமாலே - அப்பரம் பொருளாகிய திருமாலே ஆவன். ஈண்டு - இப்பொழுது; அறம் நிறுத்துதற்கு - அறத்தை நிலைநிறுத்துவதற்கு; இங்கு உதித்தனன் - இவ்வுலகத்தில் அவதரித்துள்ளான்;
இன்னும் - மேலும் . . . .
இப்பாடலில் 'மேலும்' என்பது அடுத்த பாடலொடு இயைந்து பொருள் முடிபு கொள்ளும். கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர ரேகைகள் அமைவது உத்தம இலக்கணமாகும். அத்தகைய இலக்கணம் திருமாலுக்கே அமைவதாலும், இராமனிடத்தும் எல்லா நல்இலக்கணங்களும் பொருந்தி
இருந்தமையாலும், அத் திருமாலே இராமனாக அறத்தை நிலைநாட்டும் பொருட்டு இவ்வுலகில் தோன்றினன் என ஊகித்து உணரலாம் எனக் கூறினன்.
செறுக்கும் வன்திறல் - யாவரையும் வருத்துகின்ற மிக்க வலி மையை உடைய; திரிபுரம் - முப்புரங்களும்; தீ எழச் சினவி - நெருப்புப் பற்றி எரியும்படி சினங்கொண்டு; கறுக்கும் வெஞ்சினக் காலன் தன் - கோபித்து (மார்க்கண்டேயன் மீது) கொடிய சினங்கொண்ட யமனுடைய; காலமும் -
ஆயுள் காலத்தையும்; காலால் அறுக்கும் - காலினால் உதைத்து அழித்துவிட்ட; புங்கவன் - மேலோனான சிவபிரான்; ஆண்ட - கையாண்ட; பேர் ஆடகத்தனி வில் - பெரிய பொன்மயமான ஒப்பற்ற வில்லை; இறுக்கும் தன்மை - முறிக்கின்ற செயல்; அம்மாயவற்கு அன்றியும் -
அத்திருமாலுக்கு அல்லாது; எளிதோ - பிறர்க்கு எளிதாமோ? (ஆகாது).
திரிபுரம் அழித்து, காலனையும் உதைத்த சிவபிரான் பற்றிய வில் என அவ்வில்லின் வலிமையும் பெருமையும் கூறி, அதனை வளைத்தவன் என இராமன் பெருமை கூறியவாறு. சீதையை மணக்க இராமன் வளைத்த வில்சிவன் வில். அறுக்கும்' என உணர்த்தினான். 7
இறையோய் - தலைவனே!என்னை ஈன்றவன் - என்னைப் பெற்ற தந்தையாகிய வாயுதேவன்; இவ்வுலகு யாவையும் - (என்னை நோக்கி) ''இவ்வுலகங்களையெல்லாம்; ஈன்றான் தன்னை - படைத்த பிரமனை; ஈன்றவதற்கு - (தன் உந்திக்கமலத்தில்) ஈன்றவனாகிய திருமாலுக்கு; அடிமை
செய் - தொண்டு செய்வாய்.தவம் உனக்கு அஃதே - அதுவே உனக்குத் தவமாகும்; உன்னை ஈன்ற எற்கு - உன்னைப் பெற்ற எனக்கும்; உறுபதம் உளது - சிறந்த பதவி கிடைப்பதாகும்''; என உரைத்தான் - என்று சொன்னான்; இன்ன தோன்றலே - இந்த இராமனே; அவன் - அந்தத் திருமாலாகும். இதற்கு ஏது உண்டு - இவ்வாறு யான் கூறுவதற்கு வேறொரு காரணமும் உண்டு.
என்னை ஈன்றவன் என்றது வாயு தேவனை; யாவையும் ஈன்றான் - நான்முகன்; ஈன்றான் தன்னை ஈன்றவன் - திருமால். இங்கு இராமனைக் குறித்தது. 76
ஐய - தலைவனே! முன்பு - முன்னே (அக்காலத்தில் யான் என் தந்தையை நோக்கி); தோன்றலை அறிதற்கு - அப்பெருமானை நான் அறிந்து கொள்வதற்கு; முடிவு என் - உறுதியான உபாயம் யாது? என்று இயம்ப - என்று கேட்க; எவர்க்கும் துன்பு தோன்றிய பொழுது - (அவர்) ''யாவர்க்கும் துன்பம் ஏற்படும் காலத்தில்; உடன் தோன்றுவன் - உடனே அத்துன்பம் தீர்க்க எதிரில் வந்து தோன்றுவான்; அன்பு சான்று - அப்பரமனைக் கண்டதும் உனக்கு அவன்மாட்டு அன்பு உண்டாவதே தக்க சான்றாகும்'' என உரைத்தனன் - என்று சொன்னான்; என் யாக்கை - - (அதற்கேற்ப இப்பெருமானைக் கண்ட மாத்திரத்தில்) என் உடல்; என்பு தோன்றல - எலும்புகள் உருத் தோன்றாதனவாக; உருகின எனில் - உருகின என்றால்; பிறிது எவனோ - இதற்கு மேல் வேறு சான்று எதற்கு? 77
பெரியோய் - சுக்கிரீவப் பெரியோனே! பிறிதும்- மற்றும்; அன்னவன் பெருவலி ஆற்றலை - அந்த இராமனுடைய பெரிய வலிமைச் சிறப்பை; அறிதி என்னின் - அறிய விரும்புவாயானால்; உபாயமும் உண்டு - அதற்கு ஒரு வழி உள்ளது.; அஃது - அவ் உபாயமாவது; நெறியில் நின்றன - நாம் போகும் வழியில் நிற்பனவான; அருமரங்கள் ஏழில் - எய்துதற்கரிய மராமரங்கள் ஏழிற்; ஒன்று உருவ - ஒன்றைத் துளைக்கும்படி; இந்நெடியோன் - இந்த நெடியோனாகிய இராமனது; பொறி கொள் வெஞ்சரம் - நெருப்புப்பொறி கொண்ட கொடிய அம்பொன்று; போவது காண் - செல்வதே ஆகும்; எனப் புகன்றான் - என்று சொன்னான்.
மராமரங்கள் ஏழில் ஏதேனும் ஒரு மரத்தை ஊடுருவும் ஆற்றல் இராமன் அம்புக்கு உண்டாயின. அவ்வம்பு வாலியின் மார்பைத் துளைக்கும் ஆற்றலை உடையது என்பதைத் தெளியலாம் என்று சுக்கிரீவன் தெளியுமாறு சிறந்த உபாயத்தை அனுமன் உரைத்தனன். வலியாற்றல் - ஒரு பொருட்பன்மொழி 78
நன்று நன்று எனா - (அனுமன் கூறியதைக் கேட்ட சுக்கீரிவன்) 'நீ சொன்னது நல்லது நல்லது' என்று மகிழ்ந்து; தன் தனித் துணை மாருதி - தனது ஒப்பற்ற துணையாக விளங்கும் அனுமனின்; நல் நெடுங்குன்றமும் நாணும் - நல்ல பெரிய மலைகளும் நாணும்படியான; தோளினை தழுவி -
தோள்கள் இரண்டையும் தழுவிக் கொண்டு; செம்மலைச் சென்று குறுகி - இராமனைச் சென்றடைந்து; யான் - - ; உனக்குச் செப்புவது - உனக்குச் சொல்வது; ஒன்று உளது என - ஒரு செய்தி உள்ளது'' என்று சொல்ல; இராமனும் - - ; அஃது உரைத்தி - ''அதனைச் சொல்வாய்''; என்றான் -என்று சொன்னான்.
அனுமன் கூறிய உபாயம் தனக்கும் ஏற்புடைத்தாக இருந்தமையால் அவனது அறிவின் திறம்பாராட்டும் வகையில் 'நன்று, நன்று' என்று கூறியதோடு அமையாது அவன் தோள்களைத் தழுவியும் தன் மகிழ்ச்சியைச் சுக்கிரீவன் புலப்படுத்தினான்.
அமைச்சர் பலருள் சுக்கிரீவனுக்கேற்ற ஒப்பற்ற துணையாய் இருப்பவன் ஆதலின் அனுமனைத் ''தன் துணைத் தனிமாருதி' என்றார். அனுமன் தோளினை 'எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்தெழுந்த தோளான்'' (3766) என்றது காண்க. நன்று நன்று - அடுக்கு வியப்பைக் குறிப்பது. குன்றமும் - உயர்வு சிறப்பும்மை. 79
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக