திங்கள், 11 ஜூலை, 2011

கம்பராமாயணம் - நட்புக் கோட் படலம்

கம்பராமாயணம் - நட்புக் கோட் படலம்

அனுமன், சுக்கிரீவனிடம் இராமன் சிறப்புகளைக் கூறுதல்

போன - (அவ்வாறு) சென்ற; மந்தர மணிப்புயம் - மந்தர மலை போன்ற அழகிய தோள்களால விளைந்த; நெடும்புகழினான் - மிக்க புகழையும் உடைய அனுமன்; மானவன் குணம் எலாம் - மனுக்குலத்துப் பிறந்த இராமனுடைய குணங்கள் எல்லாவற்றையும்; நினையும் மாமதியினான்
-
(எப்போதும்) சிந்திக்கும் பேரறிவு உடையவனாய்; யானும், என் குலமும் - 'நானும், எனது குலத்தினரும்; இவ்வுலகும் உய்ந்தனம் - இந்த உலகும் பிழைத்தோம்'; எனா - என்று சொல்லிக் கொண்டே; தன் ஆன - தன்தலைவனாகிய; பொருசினத்து அரசன் மாடு - போர்செய்தற்குரிய சீற்றத்தை உடைய மன்னன் சுக்கிரீவனிடம்; அணுகினான் - வந்தடைந்தான்.

அனுமன் தான் சென்ற காரியம் செவ்வனே முடிந்தது என்பதைக் குறிக்கும் வகையில் 'யானும் என் குலமும் இவ்வுலகும் உய்ந்தனம்' என்றான். தான் முதலில் சென்று இராமலக்குவரைக் கண்ட சிறப்பால் 'யானும்' என முதலில் தன்னைத் தனியே கூறினான். வாலியை வென்று வானரக் கூட்டத்தைப் பிழைக்கச் செய்வான் என்பதால் 'என் குலமும்' என்றும் அரக்கர் அழிதல் உறுதி என்பது தோன்ற 'இவ்வுலகும் உய்ந்தனம்' என்றும் கூறிச் சென்றான்.

ஆலம் உண்டவனின் நின்று - (அனுமன்) ஆலகால நஞ்சு உண்ட சிவபெருமானைப்போல நின்று; அருநடம் புரிகுவான் - அரிய நடனம் ஆடுபவனாய்; விரை செய் தார்- வாசனை மிக்க மாலையை உடைய; வாலி என்ற அளவு இலா - வாலி என்று சொல்லப்படும் அளவில்லாத; வலியினான்- வலிமை உடையவனின்; உயிர்தெற- உயிரை அழிக்க; காலன் வந்தனன் - யமன் வந்துவிட்டான்; இடர்க்கடல் கடந்தனம் - (ஆதலால்) நாம் துன்பக்கடலைக் கடந்து விட்டோம்; எனா - என்று; மேலவன் திருமகற்கு- வானத்தில் செல்லும் சூரியனின் மகனான சுக்கிரீவனுக்கு; உரை செய்தான் - உரைத்தான்.

மண் உளார் - (இராமலக்குவர்) மண்ணுலகத்தில் உள்ள மனிதர்களும்; விண் உளார் - விண்ணுலகத்துள்ளோராகிய தேவர்களும்; மாறு உளார் - இவ்விரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்து நாகரும்; வேறு உளார் - அவற்றிற்கும் வேறான உலகங்களில் இருப்பவர்களும்; திசை உளார்- எட்டுத்திசையிலும் உள்ளவர்களும்; எண் உளார் - (ஆகிய இவர்களின்)மனத்தில் உள்ளவர்களும்; இயல் உளார் - செயலிலே இருப்பவர்களும்; இசை உளார் - சொல்லிலே உள்ளவர்களும்; கண் உளார் ஆயினார் - கண்ணிலே இருப்பவர்களும் ஆவார்கள்; பகை உளார் -
தமக்குப்பகைவர்களே உடையவர்களும்; கழிநெடும் புண் உளார் - அப்பகைவர்களால் உண்டாக்கப்பட்ட மிகப்பெரிய புண்களை உடையவர்களுமாய்; ஆர் உயிர்க்கு - தம்மை அடைந்தவர்களின் அரிய உயிர்க்கு; அமுதமே போல் உளார் - அமிழ்தத்தைப் போன்றவரும் ஆவர்.

பாழியால் - தன் வலிமையால்; உலகு எலாம்- எல்லா உலகங்களும்; ஒரு வழிப் படர- தன் ஒரு குடைக்கீழ் நடக்க; வாழ் ஆழியான் - ஆட்சி செய்து வாழும் ஆணைச்சக்கரத்தை உடையவனும்; சூழிமால் யானையார் - முகபடாம் அளிந்த யானைப்படையை உடைய அரசர்கலெல்லாம்; தொழு
கழல் தயரதன் -
வந்து தொழுகின்ற கழல் அணிந்த அடிகளையும் உடையவனான தசரதனின்; மைந்தர் - புதல்வர்கள்; பேர் அறிவினார் - பேரறிவினையுடையவர்கள்; அழகினார் - பேரழகு உடையவர்கள்; ஊழியால் எளிதின் - முறைமையாக எளிதில்; நிற்கு அரசு தந்து - உனக்கு அரசாட்சியை அளித்து; உதவுவார் - உதவி செய்வார்கள்.

நீதியார் - (அவர்கள்) நீதியை மேற்கொண்டவர்கள்; கருணையின் நெறியினார் - அருள் நெறியில் ஒழுகுகின்றவர்கள்; நெறிவயின்- அந்த நீதி வழியினின்றும்; பேதியா நிலைமையார் - மாறுபடாத உறுதியை உடையவர்கள்; எவரினும் பெருமையார் - எல்லோரைக் காட்டிலும் மிக்க பெருமை உடையவர்கள்; போதியாது- எவராலும் கற்பிக்கப்படாமல்; அளவுஇலா உணர்வினர் - இயல்பாகவே அமைந்த அளவில்லாத அறிவினைப் பெற்றவர்கள்; புகழினார் - பெரும்புகழ் வாய்ந்தவர்கள்; காதி சேய் தரு - காதி என்பானின் மகனாகிய விசுவாமித்திரர் கொடுத்த; நெடுங்கடவுள் வெம்படையினார் - தெய்வத்தன்மை பொருந்திய கொடிய படைக்கலங்களைப் பெற்றவர்கள்.

வேல் இகல் சினவு தாடகை - (அவ்விருவருள் முன்னவனாம் இராமன்) சூலாயுதத்தை ஏந்தி மாறுபட்டவளாய்ச் சினந்து வருகின்ற தாடகை; விளிந்து உருள - இறந்து தரையில் உருளுமாறு; வில் கோலி - வில்லை வளைத்து; அக்கொடுமையாள்- அக்கொடியவளின்; புதல்வனைக் கொன்று- மகனான சுபாகுவைக் கொன்று; தன்கால் இயல் பொடியினால்- தன் கால்களில் பொருந்திய தூளியினால்; நெடிய கல் படிவம் ஆம்- நீண்ட கல் வடிவமாகக்கிடந்த; ஆலிகைக்கு - அகலிகைக்கு; அரிய பேர் உரு - பெறுதற்கரிய சிறந்த உருவத்தை; அளித்து அருளினான்- கொடுத்து அருள் செய்தான்.

நல் உறுப்பு அமையும் - நல்ல உறுப்பிலக்கணம் அமைந்த; நம்பி யரில் முன்னவன் - அவ்ஆண் மக்களுள் முன் பிறந்தவனான இராமன்; மிதிலை புக்க அனைய நாள் - மிதிலை நகரத்துள் புகுந்த அந்த நாளில்; எல் உறுப்பு - ஒளி வீசும் கதிர்களை உறுப்பாக உடைய; அரிய பேரி எழுசுடர்க் கடவுள்தன் - அரிய பெரிய சூரிய பகவானின்; பல் இறுத்தவன்- பற்களை உதிர்த்தவனாகிய சிவபிரானின்; வலிக்கு அமை - வலிமைக்குஏற்ப அமைந்த; தியம்பகம் எனும்வில் - 'திரியம்பகம்' என்று சொல்லப்பெறும் வில்லை; நயந்து - (வளைக்க) விரும்பி; இறுத்து அருளினான் - ஒடித்து அருளினான்.

உளை வயப் புரவியான் - பிடரி மயிரை உடைய குதிரைப்படை கொண்ட தசரதன்; உதவ - அரசை அளிக்க; உற்று - ஏற்றுக் கொண்டு; ஒருசொலால் - (பின்னர்) சொல் ஒன்றால்; அளவு இல் கற்பு உடைய சிற்றவை- அளவில்லாத (உயர்ந்த) கற்புடைய சிற்றன்னையாகிய கைகேயி; பணித்தருளலால் - கட்டளையிட்டு அருளியதால்; வளையுடைப் புணரி சூழ்- சங்குகளை உடைய கடலால் சூழப்பட்ட; மகிதலத் திரு எலாம் - நிலவுலகை ஆளும் செல்வம் எல்லாம்; இளையவற்கு உதவி - இளையவனாகிய பரதனுக்கு அளித்து; இத்தலை எழுந்தருளினான் - இக்காட்டிற்கு வந்துள்ளான்.

இவ் இராகவன் - இந்த இராமன்; தெவ் இரா வகை - பகைவர்களே இல்லாதபடி செய்த; நெடுஞ்சிகை விரா மழுவினான்- மிக்க சுவாலை பொருந்திய மழுவாயுதத்தை உடையவனாகிய; அவ் இராமனையும்- அந்தப் பரசுராமனையும்; மாவலி தொலைத்து - (அவனுடைய) மிக்க வலிமையை அழித்து; அருளினான் - (அவனைக் கொல்லாது) அருள் செய்தான்; வெகுண்டு எழும் - சினந்து எதிர்த்து வந்த; இரா அனையன் ஆம் - இருளைப் போன்றவனாகிய; அவ்விராதனை - அந்த விராதனையும்; இரா வகை - இவ்வுலகத்தில் இல்லாதபடி; துடைத்து அருளினான் - அழித்து
அருளினான்.

கரன் முதல் கருணை அற்றவர் - (இந்த இராமன்) கரன் முதலான இரக்கமற்ற அரக்கர்களுடைய; கடற் படையொடும் - கடல் போன்ற பதினாலாயிரம் படை வீரர்களோடும்; சிரம் உக - (அவர்கள்)
தலைகள் சிதறி விழ; சிலை குனித்து - வில்லை வளைத்து; உதவுவான் - (முனிவர்க்கு) உதவி செய்தவனாவான்; திசை உளார் - இந்திரன் முதலிய திசை காப்பவர்களின்; பரம் உக - துன்பச் சுமை குறையுமாறு; பகை துமித்தருளுவான்- (அறத்திற்குப்) பகையாய் உள்ளவர்களை அழித்து
அருளுவான்; பரமர் ஆம் - மேம்பட்டவர்களாகிய; அரன் முதல் தலைவருக்கு- சிவபிரான் முதலான தேவர்களுக்கும்; அதிசயத் திறலினான்- வியக்கத்தக்க வலிமையுடையவனுமாவான்.

காவலா - அரசே; காயமான் ஆயினான்- மானிட உடம்பில் தோன்றும் இந்த இராமன்; ஆயமால் நாகர் தாழ் - கூட்டமாகவுள்ள பெருமை பொருந்திய தேவர்கள் வணங்குகின்ற; ஆழியானே அலால் - திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்தருளும் திருமாலே அல்லாது; யாவனே- வேறு யாரவன்? நீ அம்மான் நேர்தி- நீ அப்பெருமைக்குரியவனுடன்நட்புக் கொள்வாயாக; நேர்இல் - நிகரில்லாத வலிமையுடைய; மாரீசன் ஆம்- மாரீசன் என்கின்ற; மாயமான் ஆயினான் - மாயமானாய் வந்தஅரக்கனுக்கு; மா யமான் ஆயினான் - (இந்த இராமன்) பெரிய யமனாகநின்று அழித்தவனாவான்.

திக்கு அவம் தர - எல்லாத் திசைகளிலும் உள்ள உயிர்களெல்லாம் அழிவு அடையும்படி; நெடும் திரள் கரம் - நீண்ட திரண்ட கைகளையும்; சினவு தோள் - சினந்து பாய்கின்ற தோள்களையும் உடைய; அக்கவந்தனும் - அந்தக் 'கவந்தன்' என்னும் அரக்கனும்; உக்க அந்தமும் - (இவர்கள் கையால்) இறந்துபட்ட முடிவும்; உடல்பொறை துறந்து - (பின்னர்) நிலத்திற்குச் சுமையான தன் உடலை விட்டு; சவரி போல் - சபரி என்பவளைப் போல; நினைந்து அமரர் தாழ் - தேவர்களெல்லாம் மதித்து வணங்குகிற; உயர்பதம் புக்க அந்தமும் - உயர்ந்த பரமபதத்தை அடைந்த அழகும்; நமக்கு - எம் போல்வாருக்கு; உரை செயும் புரையவோ - சொல்லத்தகும் தன்மையை உடையனவோ?

இரவிதன் சிறுவனே - சூரியனின் மைந்தனே!முனிவரும் பிறரும் - முனிவர்களும் மற்றவர்களும்; மேல் முடிவு அரும் பகல் எலாம் - முற்காலம் தொடங்கி எல்லையில்லாத பல நாட்களாக; இனையர் வந்து உறுவர் என்று - இராமலக்குவராகிய இவர்கள் இவ்வனத்திற்கு வருவர் என்பதை உணர்ந்து; இயல் தவம் புரிகுவார் - தத்தமக்கு இயன்ற வண்ணம் தவங்களைச்
செய்பவர்களாய்; வினை எனும் சிறை துறந்து - (தவத்தின் பயனாய் இவர்களைக் காணப்பெற்று)இருவினை என்கின்ற கட்டினின்று நீங்கி; உயர்பதம் விரவினார் - உயர்ந்த வீடுபேற்றை அடைந்தார்கள்; எனையர் என்று - (அதனால்) இராமலக்குவரை எத்தன்மையர் என்று; உரை செய்கேன் - நான் சொல்ல வல்லேன்? (சொல்ல இயலாது)

ஐயா - தலைவனே! மதி இலா நிருதர் கோன் - அறிவில்லாத அரக்கர் தலைவனாகிய இராவணன்; மனைவியை - இந்த இராமனுடைய தேவியை; மாயையால் - வஞ்சனையால்; தீய கான் நெறியின் - கொடிய காட்டின் வழியிலே; உய்த்தனன் - கவர்ந்து சென்றான்;

அவள் தேடுவார் - அவளைத் தேடுபவர்களாய் வந்த இராமலக்குவர்; நீ - நீ; தவம் இழைத்து உடைமையால் - முன் தவம் செய்திருத்தலாலும்; நெடுமனம் தூயையா உடையையால் - சிறந்த மனத்தில் தூய்மை உடையனாய் இருத்தலாலும்; உறவினை - உன்னொடு நட்புக் கொள்ள; துணிகுவார் - துணிவாராயினர்.

புந்தியின் பெருமையாய் - அறிவில் மேம்பட்டவனே! அருள் தந் திருந்தனர் - (இராமலக்குவர்) நம்மாட்டுக் கருணை வைத்துள்ளனர்; தகை நெடும் பகைஞன் ஆம் - (அதனால்) வலிமை மிக்க பகைவனா கிய; இந்திரன் சிறுவனுக்கு - இந்திரன் மகன் வாலிக்கு; இறுதி- அழிவு; இன்று இசைதரும்- இப்பொழுது நேரிடும்; போதரு - (அதனால் அவர்களோடு நட்புக் கொள்ளப்) புறப்பட்டு வருவாயாக; என்று - என்று; மந்திரம் கெழுமுநூல் மரபு- மன்னர்க்குரிய நீதி நூல்களின் மரபினை; உணர்ந்து உதவுவான்- உணர்ந்து சுக்கிரீவனுக்கு ஆலோசனை சொல்பவனாகிய அனுமன்; உரைசெய்தான் - சொன்னான்.

அன்ன ஆம் உரை எலாம் - (அனுமான் கூறிய) அத்தன்மையன வாகிய சொற்களை எல்லாம்; அறிவினால் உணர்குவான் - தன் அறிவால் அறிந்துணர்ந்த சுக்கிரீவன்; பொன்னையே பொருவுவாய் - (அனுமனை நோக்கி) 'பொன் போன்றவனே'; உன்னையே உடைய எற்கு - அறிவில்
சிறந்த உன்னையே துணையாக உடைய எனக்கு; அரியது எப்பொருள் - எந்தச் செயல்தான் அரியது?போது - வருவாயாக; எனப் போதுவான் - என்று புறப்பட்டவனாய்; தன்னையே அனையவன் - (தனக்கு வேறு எவரும் ஒப்பில்லாமையால்) தன்னையே ஒப்பவனாகிய இராமனுடைய; சரணம் வந்து அணுகினான் - திருவடிகளை வந்தடைந்தான்.

கதிரவன் சிறுவன் - சூரியன் மகனான சுக்கிரீவன்; காமர் குண்டலம் துறந்த - அழகிய குண்டலங்களை நீக்கிய; கோல வதனமும் - அழகிய முகமும்; குளிர்க்கும் கண்ணும் - (கருணையால்) குளிர்ந்து நோக்கும் கண்ணும்; புண்டரிகங்கள் பூத்து - தாமரை மலர்கள் மலரப் பெற்று; புயல் தழீஇ - கருமேகம் தழுவப்பெற்று; பொலிந்த திங்கள் மண்டலம் - விளங்குகின்ற சந்திர மண்டலம்; உதயம் செய்த - உதிக்கப் பெற்ற; மரகதக் கிளி அனானை - மரகத மலையை ஒத்தவனான இராமனைக்; கண்டனன் - கண்டான்.

நோக்கினான் - (அவ்வாறு சுக்கிரீவன் இராமலக்குவரை) நோக்கி; நெடிது நின்றான் - (அவர்கள் அழகில் ஈடுபட்டு) நீண்ட நேரம் நின்றவனாய்; நொடிவு அரும் - அழிவு இல்லாத; கமலத்து அண்ணல் - தாமரையில் தோன்றிய நான்முகன்; ஆக்கிய உலகம் எல்லாம் - படைத்த உலகில்
உள்ள உயிர்கள் எல்லாம்; அன்று தொட்டு - படைப்புக் காலந் தொட்டு; இன்று காறும் - இன்று வரையிலும்; புரிந்த பாக்கியம் எல்லாம் - செய்த நல்வினைகள் எல்லாம்; குவிந்து - திரண்டு; இருபடிவம் ஆகி - இரண்டு திருவுருவமாய்; மேக்கு உயர் - மேலே உயர்ந்த; தடந்தோள் பெற்று- பெரிய தோள்களைப் பெற்று; வீரர் ஆய் விளைந்த - இவ்வீரர்களாய்த் தோன்றின; என்பான் - என்று எண்ணுபவன் ஆவான்.

அமரர்க்கு எல்லாம் - தேவர்களுக்கு எல்லாம்; தேவர் ஆம் தேவர்- கடவுளாகிய முதற்கடவுளே (திருமாலே); மாறி- தம் உருவம் மாறி; இப்பிறப்பில் - இந்தப் பிறவியை எடுத்து; மானிடர் ஆகி வந்தார் - மானிடராக வந்துள்ளார்; ஆறுகொள் சடிலத்தானும் - (அதனால்) கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும்; அயனும் - நான்முகனும்; என்று இவர்கள் ஆதி - என்று இவர்கள் முதலாக; வேறு உள குழுவை எல்லாம்- வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம்; மானுடம்
வென்றது -
மனித குலம் வென்றுவிட்டது; அன்றே - அல்லவா? தேறினன்- என்று தெளிந்தான்.

என இனைய நினைந்து - (சுக்கிரீவன்) என்று இத்தன்மையானவற்றை ஆலோசித்து; எண்ணி - -; இவர்கின்ற- மேன்மேலும் பெருகுகின்ற; காதல்- அன்பாகிய; ஓதக்கனை கடல் நின்று - வெள்ளத்தை உடைய ஒலிக்கின்ற கடலினின்றும்; கரை ஏறா - கரை ஏறாமல்; கண் இணை - கண்கள் இரண்டும்; களிப்ப நோக்கி- பெரு மகிழ்ச்சி அடையுமாறு பார்த்து; அனகனை - குற்றமற்றவனான இராமனை; குறுகினான் - அணுகினான்; அவ் அண்ணலும் - அந்தப் பெருமை பொருந்திய இராமனும்; அருத்தி கூர - அன்பு மிக; புனை மலர்த் தடக்கை நீட்டி- அழகிய தாமரை மலர் போன்ற பெரிய கைகளை நீட்டி; போந்து - 'இங்குவந்து; இனிது இருத்தி - இனிதாக இருப்பாய்'; என்றான் - என்று உபசரித்தான்.

அவாமுதல் அறுத்த- ஆசையை வேரோடு களைந்த; சிந்தை அனகனும் - மனத்தையுடைய குற்றமற்றவனாகிய இராமனும்; அரியின் வேந்தும் - குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவனும் (ஒன்று கூடியவராய்); தவா வலி அரக்கர் என்னும் - அழியாத வலிமையை உடைய அரக்கர் என்கின்ற; தகா இருள் பகையை - தகுதியில்லாத இருளாகிய பகைவர்களை; தள்ளி - ஒழித்து; குவால் அறம் நிறுத்தற்கு - பலவகைப்பட்ட அறங்களை நிலைபெறச் செய்வதற்கு; ஏற்ற காலத்தின் - தக்காய் வந்த காலத்தின்; கூட்டம் ஒத்தார் - சேர்க்கையை ஒத்திருந்தார்கள்; உவா உற - (மேலும் அவர்கள்) அமாவாசை நேர; வந்து கூடும் - ஒன்றாக வந்து சேர்கின்ற; உடுபதி இரவி - சந்திரனையும் சூரியனையும்; ஒத்தார் - ஒத்து விளங்கினர்.

கூட்டம் உற்ற இருந்த வீரர் - நட்பாய் ஒன்றிக் கூடியிருந்த இராம சுக்கிரீவர்; குறித்தது ஓர் பொருட்கு - குறிப்பிட்டு நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு; முன்நாள் ஈட்டிய தவமும்- முற் பிறப்பில் செய்து தேடிக் கொண்ட தவமும்; பின்னர் முயற்சியும்- பின்பு (இப்பிறப்பில் தவப்பயனை
அடைய) எடுத்துக் கொள்ளும் முயற்சியும்; இயைந்தது ஒத்தார் - ஒன்று சேர்ந்ததை ஒப்பவர் ஆனார்; மீட்டும் - மேலும்; வாள் அரக்கர் என்னும் தீவினை - கொடிய அரக்கர்கள் என்னும் தீவினையை; வேரின் வாங்க - வேரோடு அழிக்க; கேட்டு உணர் கல்வியோடு - ஆசிரியர்பால் கேட்டு அறிந்த கல்வியோடு; ஞானமும்- தத்துவ ஞானமும்; கிடைத்தது ஒத்தார் - வந்து கூடியதை ஒத்தவரானார்.

ஆயது ஓர் அவதியின்கண் - அவ்வாறு ஒருங்கு கூடியிருந்த சமயத்தில்; அருக்கன் சேய் - சூரியன் மகனான சுக்கிரீவன்; அரசை நோக்கி - இராானைப் பார்த்து; செல்வ - ''எல்லாச் செல்வமும்
உடையவனே! உலகுக்கு எல்லாம் - உலகம் அனைத்திற்கும்; நாயகம்என்னல் ஆம் - தலைமையான பொருள் என்று சொல்லுதற்கு ஏற்ற; நலம் மிக்கோயை - நல்ல குணங்களை உடையவனான; நின்னை - உன்னை; மேயினென் - யான் வந்து சேர்ந்தேன்; தீவினை தீய நோற்றார்- (எனவே) தீவினை ஒழியுமாறு தவம் செய்தவர்கள்; என்னின் யார்? - என்னைக் காட்டிலும் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இலர்); விதியே நல்கின் - ஊழ்வினையே இவ்வாறு கூட்டி அருளுமாயின்; மேவல் ஆகாது என் - அடைய முடியாதது யாதுளது? (ஒன்றுமில்லை).

ஐய - (இராமன் சுக்கிரீவனை நோக்கி) ஐயனே! மை அறு தவத் தின்வந்த - குற்றமற்ற தவமுடையவளாய் வந்த; சவரி - சவரியானவள்; இம்மலையில் நீ வந்து- இந்த ருசியமுக மலையில் நீ வந்து; எய்தினை இருந்த தன்மை- பொருந்தி இருந்த நிலையை; இயம்பினள் - சொன்னாள்; யாங்கள் உற்ற - நாங்கள் அடைந்துள்ள; கையறு துயரம் - செயலற்று வருந்தும் பெருந்துன்பத்தை; நின்னால் கடப்பது கருதி - உன்னால் நீக்குவதுகருதி; வந்தேம் - இங்கு வந்தோம்; நின் தீரும் - அத்துன்பம் உன்னாலேயேதீர்வதாகும்'; என்ன - என்று கூற (அதைக்கேட்ட);
அரிக்குலத்து அரசன் - குரங்கினத்திற்கு அரசனாகிய சுக்கிரீவன்; சொல்வான் - சொல்லத்தொடங்கினான்.

முன்னவன்- எனக்கு அண்ணனாகிய வாலி; பின் வந்தேனை- பின் பிறந்த தம்பியாகிய என்னை (அடிக்க); முரண் உடை - வலிமையுள்ள; தடக்கை ஓச்சி - பெரிய கையை ஓங்கிக் கொண்டு; இருள் நிலை புறத்தின் காறும் - இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும்;
உலகு எங்கும் தொடர -
எல்லா உலகங்களிலும் பின்தொடர்ந்து துரத்த; இக்குன்று அரண் உடைத்துஆகி - இம்மலையையேபாதுகாவலாகக்கொண்டு; உய்ந்தேன் - உயிர் பிழைத்தேன்; ஆர் உயிர்துறக்கலாற்றேன் - அரிய உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான்; சரண் உனைப் புகுந்தேன் - உன்னை அடைக்கலமாக அடைந்தேன்; என்னைத் தாங்குதல் - என்னைக் காப்பாற்றுதல்; தருமம் என்றான்-நினக்குரிய தருமமாகும் என்றான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக