புதன், 6 ஜூலை, 2011

மணிமேகலை - 23 சிறைவிடு காதை

1
உரை
௧௦
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங்கூந்தல் நரை மூதாட்டி-அரசன் ஆணையால் அழகிய நீண்டகூந்தல்நரைத்த முதியோளாகிய வாசந்தவை என்பாள், அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் - அரசற்கும் அரச குமரற்கும் திருவனைய நிலவுரிமைத் தேவியர்க்கும், கட்டுரை விரித்துக் கற்றவை பகர்ந்தும் - பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தாங்கற்றனவற்றை எடுத்துரைத்தும், பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள் - அவர்கட்கு உண்டாகிய துன்பங்களை நீக்கும் பயன் சிறந்த மொழியினையுடையாள் ஆதலின், இலங்கு அரிநெடுங்கண் இராசமாதேவி-விளங்குகின்ற அரி படர்ந்த பெரிய கண்களையுடைய அரசன் பெருந்தேவி, கலங்கு அஞர் ஒழியக் கடிது சென்று எய்தி-கலங்குதற்குக் காரணமாகிய துன்பம் நீங்குமாறு விரைவிற் சென்று அவளிருப்பிடத்தையடைந்து, அழுது அடி வீழாது ஆயிழை தன்னைத் தொழுது முன்னின்று தோன்ற வாழ்த்தி-அவள் அடிகளில் வீழ்ந்து அழாமல் மன்னவன் றேவியை அஞ்சலி செய்து முன்னே நின்று நன்கு வாழ்த்தி ;
11
உரை
16

கொற்றம் கொண்டு குடி புறம் காத்தும்-வெற்றிகொண்டு குடிகளைப் பிறர் நலியாமற் பாதுகாத்தும். செற்றத்தெவ்வர் தேஎம் தமதாக்கியும் - பகைமையை யுடைய மாற்றாது நாட்டினைத் தம்முடையதாக்கியும் அன்றி, தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச்செல்க என-தருப்பைப் புல்லிற் கிடத்தி வாளாற் பிளந்து போரில் வெற்றிகொண்டு உயிர் துறந்த மன்னர் செல்லும் உலகத்தின்கட் செல்க என்று கூறுமாறு, மூத்து விளிதல்-வாளா முதுமையுற்று இறத்தல், இக்குடிப் பிறந்தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தகவுடைத்தே - இச்சோழர் குடியிற் பிறந்தோர்க்கு நாணுந் தகுதியை யுடைத்து ஆகலான் இதனைக் கூறுதற்கு எனது நா எழுகின்றிலது ;
17
உரை
20

தன் மண்காத்தன்று பிறர் மண்கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது-நின் புதல்வ னிறந்தது தன் நிலத்தைக் காத்தமையாலன்று பகைவர் நிலத்தைக் கொண்டமையாலுமன்று காமத்தால் நிகழ்ந்த அவ்விறப்பு யாதென்று கூறப்படும், மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பங் கொள்ளேல் என்று அவள் போயபின் - உயிர்ப் பன்மைகளைக் காக்கின்ற அரசன் முன்னர்த் துன்பம் கொள்ளாதே என வுரைத்து வாசந்தவை சென்றபின்னர் ;
21
உரை
30

கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி-செயலறவினையுடைய உள்ளத்தை மறைத்து அடக்கி, பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறமறைத்து - பொய்ந்நெறிக்கண் ஒழுகுதலைக்கொண்டு அதனைப் புறத்தே தோன்றாமல் மறைத்து, வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று-மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன் என்று கருதி, அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெருந்தேவி, அரசனுக்கு ஒரு நாள் - ஒரு நாள், அரசன் பால், பிறர் பின் செல்லாப் பிக்குணிக்கோலத்து-மற்றையோர் பின்னே செல்லாத பிக்குணி வடிவத்தைக் கண்டு, அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன் - அறிவு வேறுபட்ட உதயகுமரன் அரசாளும் தகுதியில்லாதவன், கரும்புடைத் தடக்கைக் காமன் கையற - கரும்பு வில்லையுடைய பெரிய கையையுடைய காமன் செயலறுமாறு, அரும் பெறல் இளமை பெரும் பிறிதாக்கும்-பெறுதற் கரிய இளமைப் பருவத்தைப் பயன்படாது கெடச் செய்த, அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு - நல்லறிவு நேர்பட்ட மணிமேகலைக்கு, சிறை தக்கன்று செங்கோல் வேந்து என - செங்கோல் வேந்தே சிறை தக்கதன்று என மொழிய ;
31
உரை
34

சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது - அரசர்கட்கு அறிவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளை யுடையவரே புதல்வர் ஆவர் அல்லாதார் மறத்தற்குரியர் என்பதனை, அறிந்தனை ஆயின்-உணர்ந்தனை யானால், இவ் ஆயிழை தன்னை - இந் நங்கையை, செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல - நெருங்கிய சிறைத் ன்பத்தினின்றும் நீக்குவாயாக என்று அரசன் கூற ;
35
உரை
38

என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்லென்று - இவ்விளங்கொடி போல்வாள் என்னுடன் இருப்பினும் இருக்க அன்றித் தனக்குரிய ஓட்டினை ஏந்திப் பிச்சைக்குச் செல்லினும் தடுப்பவர் இல்லை என்று, அங்கவள்தனைக் கூஉய் - மணிமேகலையை அழைத்து, அவள் தன்னோடு - அவளுடன், கொங்கு அவிழ் குழலாள் கோயிலுட் புக்கு - மணம் விரியும் கூந்தலையுடைய இராசமாதேவி அரண்மனையுட் புகுந்து ;
39
உரை
42

அறிவு திரித்து - இவளது அறிவை மருந்தினால் வேறுபடுத்தி, இவ்வகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே - இவ்வகன்ற ஊரிலுள்ளோ ரனைவரும் இவளை அடிக்கும் கோலத்தைச் செய்வேன் என்று கருதி; மயற்பகை யூட்ட - பித்தேறுதற்குக் காரணமாகிய மருந்தை யூட்ட, மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக-மறு பிறப்பினை அறிந்த மணிமேகலை மறத்தலில்லா அறிவுடன் விளங்க ;
43
உரை
48

கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் - கல்வி யில்லாத இளைஞன் ஒருவனை அழைத்து, வல்லாங்குச் செய்து-வல்லமை செய்து, மணிமேகலை தன் இணைவளர் இளமுலை-மணிமேகலை தன் இளங்க கொங்கைகள், ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்-எனது மிக்க அழகினையுடைய மார்பின்கண பொருந்தும் குறியினைச் செய்து கூடினள் என்னும், பான்மைச் கட்டுரை பலர்க்கு உரை என்றே-முறைமையுடைய கட்டுரையைப் பலர்க்கும் கூறுவாயாக என்று, காணம் பலவும் கைநிறை கொடுப்ப - பொற்காசுகள் பலவற்றைக் கைநிறையக் கொடுக்க ;
49
உரை
57

ஆங்கவன் சென்று அவ்வாயிழை இருந்த பாங்கில் ஒரு சிறைப் பாடு சென்று அணைதலும்-அறிவற்ற அவ்விளைஞன் மணிமேகலை இருந்த அழகிலாத ஒரு புறத்திலே பக்கலிற் சென்று அடைதலும், தேவி வஞ்சம் இது எனத் தெளிந்து - அரசன் மனைவியினுடைய வஞ்சமாகும் இது என்று உணர்ந்து, நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி - நாப் புடை பெயருமளவில் கூறும் மந்திரத்தைச் செவ்வனம் ஓதி, ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்ப ' மணிமேகலை ஆடவன் வடிவத்துட னிருக்க, காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி - பொன் பெற்ற கயவன் மிகுந்த துன்பத்தை யடைந்து, அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் - அரசன் மனைவியரிருக்கும் அந்தப்புரத்தில் ஆண் மக்கள் குறுகார், நிரயக் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று-நிரயத்தை யடைதற்குரிய கொடுமையை உடைய இவளது தீய எண்ணத்தை யான் அறிந்திலேன் என்று கருதி, அகநகர் கைவிட்டு ஆங்கவன் போய பின் - அவன் ஊரைவிட்டு ஓடிய பின்னர் ;
58
உரை
66

மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று - உதயகுமரனுக்குக் காம நோயை உண்டாக்கி அவனைக் கொல்லுவித்த இவளை உயிருடன் வைத்திருப்பதால் யாது பயன் என்று கருதி, உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என்று பொய் நோய்காட்டிப் புழுக்கறை அடைப்ப - உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய நோயினால் மணிமேகலை உணவுண்டல் நீங்கினாள் என்று அவள்பால் பொய் நோயைக் கூறி அவளைப் புழுக்கமுடைய ஓர் அறையில் அடைத்து வைக்க, ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப-மணிமேகலை பசியை ஒழிக்கும் மந்திரம் உடையளாயினமையால் உடல் வாடாது மகிழ்ச்சியுடன் இருக்க, ஐயென விம்மி ஆயிழை நடுங்கி-அரசன் றேவி விரைவுடன் பொருமி நடுக்கமெய்தி, செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் - தவமகளாகிய நினக்குத் துன்பத்தைச் செய்தேன், என்மகன் உற்ற இடுக்கண் பொறாது-என் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவளாய், பொன் னேரனையாய் பொறுக்க என்று அவள் தொழ - திருமகள் போல்வாய் பொறுத்துக் கொள்க என்று பெருந்தேவி வணங்க;
67
உரை
79

நீலபதிதன் வயிற்றில் தோன்றிய - நீலபதி என்பவளது வயிற்றிற் பிறந்த, ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை - மணங்கமழும் மாலையினையுடைய இராகுலனை, அழற் கண் நாகம் ஆருயிர் உண்ண - நஞ்சுவிழி அரவு உயிரைக்கொள்ள, விழித்தல் ஆற்றேன் என்னுயிர் சுடு நாள் - உயிர் வாழ்தலைப் பொறாமல் யான் என துயிரைத் தீயிலிட்ட ஞான்று, யாங்கிருந்து அழுதனை இளங்கோன் தனக்கு - நீ இளங்கோவிற்கு எங்கிருந்து அழுதாய், பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை-பூங்கொடியனைய தேவி பொருந்தாதனவற்றைச் செய்தாய், உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ - நீ நின் மகனது உடலுக்கு அழுதாயோ அன்றி உயிரினுக்கு அழுதாயோ, உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே - உடலின் பொருட்டு அழுதாயானால் நின் மகனைப் புறங்காட்டிலிட்டோர் யாவர், உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது - உயிரின் பொருட்டு அழுதாயேல் செய்வினை வழியே அவ்வுயிர் புகுமிடத்தைத் தெளிய அறிய ஒண்ணாது, அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-ஆராய்ந்த வளையல்களையுடையவளே நின் மகனது உயிரினிடம் நீ அன்புடைமை யானால் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொள்ளல் வேண்டும் ;
80
உரை
85

மற்று உன் மகனை மாபெருந்தேவி செற்றகள்வன் செய்தது கேளாய் - அரசமாதேவி, மற்றும் நின்மகனைச் சினந்த காஞ்சனன் கொலைபுரிதற்குக் காரணமான தீவினையைக் கேட்பாயாக, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்தாங்கு உருத்தெழும் வல்வினை - சோற்றுக் கலம் சிதைமாறு வீழ்ந்த அட்டிலாளனை உடலைத் துண்டமாக வெட்டியமையால் தோன்றி எழுந்த வலிய வினையானது, நஞ்சு விழி அரவின் நல்லுயிர் வாங்கி-விழியில் நஞ்சினைக் கொண்ட பாம்பினால் அவனது நல்லுயிரைக் கொண்டு, விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே-இப்பிறவியில் விஞ்சையனது வாளினால் வீழ்த்தியது ;

86
உரை
90

யாங்கறிந்தனையோ ஈங்கிது நீ எனில்-நீ இதனை எங்ஙனம் அறிந்தனை என வினாவின், பூங்கொடி நல்லாய்புகுந்ததுஇது என - பூங்கொடி போல்வாய் நிகழ்ந்தது இது வென்று, மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா-மலர் கொய்யும் பொருட்டுச் சுதமதியுடன் தான் உவவனம் சென்றது முதலாக, தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா - கந்திற்பாவையின் பொருண்மொழிகளைக் கேட்டுத் தெளிவுற்றது இறுதியாக, உற்றதை எல்லாம் ஒழிவின்று உரைத்து - நிகழ்ந்தன அனைத்தையும் தப்பாமற் கூறி ;
91
உரை
97

மற்றும் உரை செய்யும் மணிமேகலை தன்-மணிமேகலை பின்னுங் கூறுவாள், மயற்பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன் - பித்தேற்றும் மருந்தை யுண்பித்தாயாகவும் மறு பிறப்பினை அறிந்தேன் ஆகலின் மறத்தலில்லா அறிவுடையேனாயினேன், கல்லாக் கயவன் கார் இருள் தான்வர நல்லாய் ஆணுரு நான் கொண்டு இருந்தேன் - மெல்லியலே அறிவிலாக் கீழ்மகன் கரிய இருளின்கண் வர யான் ஆண் வடிவங்கொண்டு இருந்தேன், ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது-பசி நீக்கும் மந்திரம் பெற்றிருந்தமையாலன்றோ நீ செய்த வஞ்சத்தினின்றும் தப்பியது ;
98
உரை
101

அந்தரஞ் சேறலும் அயலுருங்கோடலும் - விசும்பூடு செல்லுதலையும் வேற்றுருக் கொள்ளுதலையும், சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்-முற்பிறப்பில் கணவனாயிருந்தோனைப் பெற்ற நினது கொடிய துன்பத்தை நீக்கித் தீவினைகளை ஒழிக்கும் பொருட்டு உளத்தி லெண்ண வில்லை ; வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலேன் என்க.
102
உரை
103

தையால்-தையலே, உன்றன்-உனது, தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து-தடுமாற்றத்துக்குக் காரணமாகிய வருத்தத்தைச் செய்யும் அறியாமையாகிய மயக்கத்தின் நீங்கி, இன்னுரை கேளாய் - யான் கூறும் இவ்வினிய மொழிகளைக் கேட்பாயாக ; எய்யாமை - அறியாமை. மையல் - செல்வச் செருக்குமாம்.
104
உரை
111

ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் காருக மடந்தை- அரசரது கொடுங்கோன்மையால் அனைவரும் தத்தம் நிலைகலங்கிய நல்ல நாட்டில் இல்லற ஒழுக்கினளாகிய ஒருத்தி, கணவனும் கைவிட-கணவனும் கைவிட்டமையான், ஈன்ற குழவியொடு தான் வேறாகி - தான் ஈன்ற குழந்தையினின்றும் தான் வேறிடத்துப் பிரிவுற்று, மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி - மயங்கி ஒரு திக்கிற் சென்று வரைவின்றி வாழுமிடத்து, புதல்வன் தன்னை ஓர் புரிநூன் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க - அக்குழவியை ஓரந்தணன் ஊரிலுள்ளோர் அறியாதவாறு வளர்த்து வர, ஆங்கப் புதல்வன் அவள் திறம் அறியான் தான் புணர்ந்து அறிந்து பின் தன்னுயிர் நீத்தலும் - அப்புதல்வன் அவள் தன் தாய் என்னுந் தன்மையை அறியானாய் அவளுடன் கூடிப் பின்னர் உணர்ந்து தனது உயிரைத் துறந்ததனையும் ;
112
உரை
119

நீர் நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூல்முதிர் மடமான் வயிறு கிழித்து ஓட-நீரை நச்சிய விருப்பத்தால் பெரிய காட்டின்கண் வருந்துகின்ற சூல் முதிர்ந்த இளையமானினது வயிற்றைக் கிழித்துச் செல்லுமாறு, கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப - காட்டில் வேட்டையாடுவோன் கடிய அம்பினைச் செலுத்த, மான் மறி விழுந்தது கண்டு மனமயங்கி - மான்குட்டி வயிற்றினின்றும் விழுந்தனைக் கண்டு உளங் கலங்கி, பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மைய னாகி - அதனது விளியோசையைக் கேட்டு அதன் பக்கத்தோனாகி, உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர் கண்டு-நெட்டுயிர்ப்புடன் அதனது சிவந்த கண்களினின்று சிந்துகின்ற நீரினைக் கண்ணுற்று, ஓட்டி எய்தோன் ஓருயிர் துறந்ததும் - அம்பினை வீசி எய்த வேட்டுவன் தன் உயிரைத் துறந்தனையும், கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி - வாள்போலும் பெரிய கண்களையுடையாய் நீ கேள்வியுற்றும் அறிவாயோ ;
120
உரை
123

கடாஅ யானைமுன் கட் காமுற்றோர் விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது-கள்ளை விரும்பி யுண்டோர் மதம் பொருந்திய யானையின் முன்னர் நீங்காமற் சென்று அதன் வெள்ளிய மருப்பிலே வீழ்வது, உண்ட கள்ளின் உறுசெருக்காவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்-அழகிய நங்காய் அவர் கள்ளுண்டதனாற் போந்த பெருங்களிப்பினால் நிகழ்வதனைக் கண்டிருக்கின்றனையோ ;
124
உரை
125

பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் - பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் காரியமாகக் கொண்டவர்கள், கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ - செயலறவாகிய துன்பத்தினின்றும் நீங்கியதும் உண்டோ ;
126
உரை
127

களவு ஏர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் - களவாகிய ஏரால் உழுதலைச் செய்து வாழ்வோர் அடையுங் கொடிய துன்பத்தை, இளவேய்த் தோளாய்க்கு இது என வேண்டா - இளைய மூங்கிலனைய தோள்களையுடைய நினக்கு யான் இத்தகைத்து எனக் கூறுதல் வேண்டா;
128
உரை
129

மன்பே ருலகத்து வாழ்வோர்க்கு - மிகப் பெரிய உலகத்தில் வாழும் மக்களுக்கு, இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் - ஈண்டுக் கூறப்பட்ட காமம் முதலிய ஐந்தும் துன்பந் தருவன வாகலின் அவற்றைக் கைவிடல் வேண்டும்;
130
உரை
141

கற்ற கல்வி அன்றால் காரிகை-காரிகையே கற்ற கல்வியே மெய்யுணர்வாகாது, செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் - அகத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கினோரே முழுவதும் உணர்ந்தோராவார், மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்க் இல்லது நிரப்புநர் - வறுமைத் துன்பமுடைய மக்களுக்கு வேண்டுவனவற்றை அளிப்போரே வளப்பமுடைய பெரிய பூமியின்கண் வாழ்வோர் எனப்படுவர், திருந்தேர் எல்வளை- திருந்திய அழகமைந்த ஒள்ளிய வளையினையுடையாய். செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் - பசியால் வருந்தி வந்தோரது தீர்த்தற்கரிய பசியை நீக்கினோரே செல்லுலகம் அறிந்தவராவர், துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என - உயிர்ப்பன்மைகட் கெல்லாம் அன்பு நீங்காதோரே துன்பத்தினை யறுக்கும் மெய்ப் பொருளை யறிந்தோராவர் என்று, ஞான நன்னீர் நன்கனம் தெளித்து - ஞானமாகிய நல்ல நீரை நன்றாகத் தெளித்து, தேனார் ஓதி செவி முதல் வார்த்து - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இராசமாதேவியின் செவியிடம் வார்த்து, மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடும் வெந்தீ ஆயிழை அவிப்ப - புதல்வ னிறந்த துன்பம் நெருப்பாக மனமே விறகாக உள்ளத்தைச் சுடுகின்ற கொடிய தீயை மணிமேகலை அவிக்க;
142
உரை
147

தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து - தேற்றாங்கொட்டையால் தேற்றப் பெற்ற சிலவாகிய நீரைப் போல மனந் தெளிந்து, மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி - பகைமை கொண்டு சிந்தியாத மனத்தினையுடையளாகி, ஆங்கவள் தொழுதலும் - மாதேவி வணங்குதலும், ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி-மணிமேகலை அதனைப் பொறாமல் தான் வணங்கித் துதித்து, தகுதி செய்திலை காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெருந் தேவி என்று - என் நாயகனைப் பெற்ற தாய் அன்றியும் அரசனுடைய பட்டத்துத் தேவியாக உள்ளாய் ஆகலின் நீ தக்க தொன்றினைச் செய்திலை என்று கூறி, எதிர் வணங்கினள் என் - மணிமேகலை எதிர் தொழுதனள் என்க.

சிறைவிடு காதை முற்றிற்று.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக