இதற்கு முன் நீ அனுபவித்துக் கழிந்தன தவிர; மேல் வந்து உறுவன - இனி வந்து சேரும் துன்பங்களை; தீர்ப்பல்- நான் நீக்குவேன்; அன்ன நின்றன- இனி வருவனவாகிய இன்பதுன்பங்கள்; எனக்கும் நிற்கும் - எனக்கும் உனக்கும்; நேர் - சமமாகும்''; என மொழியும் நேரா - என்று
உறுதிமொழியும் கொடுத்து.
மற்று இனி உரைப்பது என்னே - மேலும் நான் இனிச் சொல்லக்கூடியது யாது உளது? வானிடை - விண்ணுலகிலும்; மண்ணில் - மண்ணுலகிலும்; நின்னைச் செற்றவர் - நின்னை வருத்தியவர் ; என்னைச் செற்றார் - என்னை வருத்தியவராவர்; தீயரே எனினும் - தீயவராகவே இருந்தாலும்; உன்னோடு உற்றவர் - உன்னோடு நட்புக் கொண்டவர்கள்; எனக்கும் உற்றார் - எனக்கும் நண்பராவர்; உன் கிளை - உன் உறவினர்; எனது - என் உறவினராவர்; என் காதல் சுற்றம் - என்
அன்புள்ள சுற்றத்தினர்; உன் சுற்றம் - உன் சுற்றத்தினராவர்; நீ என் இன் உயிர்த்துணைவன் - நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்'; என்றான் - என்றான்.
இராமன் சுக்கிரீவனைத் தன் உயிர் நண்பனாகக் கொண்டமையால் அவனுடைய பகைவர்களும் நண்பர்களும் சுற்றத்தினரும் தனக்கும் முறையே பகைவர், நண்பர், சுற்றத்தினர் ஆவர் எனக்கூறித் தன் நட்பின் உறுதித் தன்மையை உணர்த்தினான். 'தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும்
உற்றார்' என்று மேலும் தன் நட்பின் வலிமையை உரைத்தான். சுக்கிரீவனின் உற்றார் நல்லவராக இருந்து, பின்னர்த் தீயராக மாறினும் அவர்களை உற்றாராகக் கொள்வதன்றி விட்டு நீங்குதல் இல்லை என இராமன் உறுதி கூறினான். ''
அனகன் சொன்ன வார்த்தை- குற்றமற்றவனாகிய இராமன் சொன்ன சொல்; எக்குலத்துளோர்க்கும் - எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்; மறையினும் - வேதவாக்கைக் காட்டிலும்; மெய் என்று உன்னா - உண்மையானதாகும் என்று எண்ணி; குரக்குச் சேனை ஆர்த்தது- குரங்குக்கூட்டம் ஆரவாரம் செய்தது; அஞ்சனை சிறுவன் - அஞ்சனையின்
புதல்வனான அனுமன்; மேனி - மேனியை; உரோமப் புளகங்கள்-மயிர்ச்சிலிப்புகள்; பொடித்துப் போர்த்தன - அரும்பி மறைத்து விட்டன; விண்ணோர் - தேவர்கள்; பூவின்மாரி தூர்த்தனர் - மலர் மழையால் பூமியை நிரப்பினர்; மேகம் சொரிந்தன- மேகங்கள் மழையைப் பொழிந்தன.
இராமன் கூறிய உரைகளால் வாலிவதம் உறுதி என்ற மகிழ்ச்சியாலும், யாரினும் சிறந்த இராமன் நட்புக்கிடைத்த களிப்பாலும் குரங்குச் சேனை மகிழ்ந்தது எனலுமாம். தான் இராமனிடத்துத் தூதுபோய் வந்தது பயன்பெற்றதனால் அனுமன் மேனி பொடித்தனன். இராவண வதம் நடைபெறும்; தங்கள் துன்பம் நீங்க வழி ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியால் வானவர் பூமாரி பொழிந்தனர். இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது எனலாம். 28
ஆண்டு எழுந்து - அப்பொழுது எழுந்திருந்து; அடியில் தாழ்ந்த - இராமனது திருவடிகளில் விழுந்து வணங்கிய; அஞ்சனை சிங்கம் - அஞ்சனை ஈன்ற சிங்கம் போன்ற அனுமன்; தூண்திரள் தடந்தோள் மைந்த - தூணைப்போலத் திரண்ட பெரிய தோள்களை உடைய தசரதனின் மகனே!
வாழி - வாழ்க!தோழனும் நீயும் வாழி- தோழனாகிய சுக்கிரீவனும் நீயும் வாழ்க!ஈண்டு - இப்பொழுது (நீங்கள்); நும் கோயில் எய்தி - உமது மாளிகையை அடைந்து; இனிதின் - இன்பமாக; நும் இருக்கை காண- நுமது இருக்கையில் எழுந்தருளியிருத்தலைக் காண; வேண்டும் -
விரும்புகிறோம்; நும் அருள் என்- தங்கள் திருவுள்ளம் யாது?என்றான்-; வீரனும் - வீரனாகிய இராமனும்; விழுமிது என்றான்- 'சிறந்தது' என்று கூறி உடன்பட்டான்.
இராம சுக்கிரீவர் நட்புக் கொண்டமைக்கு அனுமன் மகிழ்ந்து வாழ்த்துக் கூறிச் சுக்கிரீவன் இருப்பிடத்திற்கு வரவேண்டும் என்று வேண்ட, இராமனும் அதற்கு உடன்பட்டான். மேலோரிடம் பேசுகையில் முதலில் வாழ்த்துக் கூறிப் பின்னர்ச் செய்தி கூறல் முறையாதலின் அனுமன் 'வாழி' என வாழ்த்திப் பின்பு பேசத் தொடங்கினான். சுக்கிரீவனும் இராமனும் நட்புரிமையோடுநெடுங்
காலம் வாழவேண்டும் என்ற விருப்பத்தால் 'தோழனும் நீயும் வாழி' என வாழ்த்தினான். உரிமை பற்றிச் சுக்கிரீவன் மாளிகையை 'நும்கோயில்' என இராமனை உளப்படுத்திக் கூறினான். 29
இரவி சேயும் - சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கும்; இருவரும் - இராமலக்குவரும்; அரிகள் ஏறும் - குரங்குகளுக்குச் சிங்கம் போன்றவனான அனுமனும்; வெம் ஊகச் சேனைசூழ - கொடிய வானரச் சேனைகள் சூழ்ந்து வர; அறம் தொடர்ந்து - தருமதேவதை பின் தொடர்ந்து வந்து; உவந்து
வாழ்த்த - மகிழ்ந்து வாழ்த்தவும்; நாகமும் - சுரபுன்னை மரங்களும்; நரந்தக்காவும் - நரந்தம் என்னும் மரங்களின் சோலையும்; நளின வாவிகளும் - தாமரை பொய்கைகளும்; நண்ணி - பொருந்தி; போக பூமியையும் ஏசும் - இன்பத்தை அனுபவிக்கும் போக பூமியாகிய சுவர்க்க
லோகத்தையும் இகழ்கின்ற; புது மலர்ச் சோலை புக்கார் - அன்றலர்ந்த மலர்கள் நிறைந்த சோலையை அடைந்தனர்.
அழிந்து போவதாய் இருந்த தன்னை இராமசுக்கிரீவர் நட்புக் காக்க இருப்பதால், தருமதேவதை அவர்களைப் பின்தொடர்ந்து வாழ்த்தியது. சுவர்க்க லோகத்தில் பெறும் இன்பத்தினும் சிறந்த இன்பம் தரும் இடமாதலின் 'போக பூமியையும் ஏசும் புதுமலர்ச்சோலை' என்றார். தன் மாளிகைக்கு அழைத்துச் செல்வோன் ஆதலின் 'சுக்கிரீவனை முன்னவரும், விருந்தினர்களாகச் செல்வதால் இராமலக்குவரை அடுத்தும், அன்பும் அடக்கமும் கொண்டு இராமலக்குவர் பின் செல்லும் அனுமனை அவ்விருவர்க்குப் பின்னும், ஏனைய வானரங்களை அனுமனுக்குப் பின்னும் செல்லுமாறு வைத்துள்ள வைப்பு முறை நயம் பொருந்தியதாகும். 30
ஆரமும் அகிலும் துன்றி - (அச்சோலை) சந்தன மரங்களும் அகில் மரங்களும் நெருங்கப் பெற்று; அவிர் பளிக்கு அறை அளாவி - விளக்கம் மிக்க படிகப் பாறைகள் பொருத்தப்பெற்று; நாரம் நின்றன போல் - அவை தண்ணீர் நிறைந்து நின்றவை போல; தோன்றி - காணப்பட்டு (விளங்க);
நவமணித் தடங்கள் - நவமணிகளால் அமைந்த பள்ளமான இடங்களின்; நீடும் பாரமும் - நீண்டகரைகளிலும்; மருங்கும் - பக்கங்களிலுமுள்ள; தெய்வத்தருவு - தெய்வத் தன்மையுடைய மரங்களில்; நீர்ப்பண்ணை ஆடும்- நீர் விளையாட்டைச் செய்யும்; சூர் அர மகளிர் - தெய்வ
மகளிர்தம்; ஊசல் துவன்றி - ஊஞ்சல்கள் நெருங்கிய; சும்மைத்து - ஆரவாரத்தைஉடையது.
சந்தனம் முதலிய சிறந்த மரங்களும், பளிக்கறைகளும் பொருந்தி, தேவமகளிர் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடி, மரங்களில் ஊஞ்சல் விளையாடப் பெற்ற சிறப்பினை உடையது அச்சோலை எனப்பட்டது. பளிக்கு - பளிங்கு; அறை - பாறை; நாரம் - தண்ணீர். இது வடசொல்; பாரம் - கரை; பண்ணை - மகளிர் விளையாட்டு; தரு - தருவு என உகரச்சாரியை பெற்று வந்தது, சும்மைத்து - ஒன்றன்பால் குறிப்புவினைமுற்று. தேவ மகளிர் ஊசலாடும் இயல்பினர் என்பதை
'வானவர் மகளிராடும் வாசம் நாறூசல் கண்டார்' (862) என்பதாலும் அறியலாம். 31
அயர்வுஇல் கேள்விசால் - தளர்வு இல்லாத கேள்வியால் நிரம் பப்பெற்ற; அறிஞர் வேலைமுன் - அறிஞர்களின் கடல்போன்ற கூட்டத்திற்கு முன்; பயில்வு இல் கல்வியார் - கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்; பொலிவு இல் பான்மை போல் - மேன்மையில்லாது; விளங்குதல் போல; குயிலும் மாமணிக் குழுவும் சோதியால் - அச்சோலையில் பாதிக்கப்பட்ட சிறந்த
மணிகளின் திரண்ட ஒளியால்; வெயிலும் - சூரிய ஒளியும்; வெள்ளி வெண் மதியும்- வெள்ளி போன்ற வெண்திங்களின் ஒளியும்; மேம்படா - மேம்பட்டுத் தோன்றவில்லை.
இதனால் அங்குள்ள இரத்தினங்களின் ஒளி சூரிய சந்திரர்களின் ஒளியினுக்கு மிக்க விளங்குவது அறியப்படுகிறது. அயர்வு - ஐயம்திரிபு. கேள்வியானது கல்வி அறிவைப் பெருக்குதலால் 'கேள்விசால் அறிஞர்' என்றார். வேலை - கடல்; கடல் போன்ற அவையை உணர்த்திற்று; உவமை
ஆகுபெயர். கற்றார் முன் கல்லார் போல என்பது உவமை. ''வாசகம் வல்லார் முன்னின்று யாவர் வாய் திறக்க வல்லார்'' (895) ''எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்'' (நன்னெறி - 21) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. 32
ய அன்னது ஆம் - இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய; இனிய சோலைவாய் - இனிமைமிக்க சோலையிடத்து; மேய மைந்தரும் - சென்றடைந்த இராமலக்குவரும்; கவியின் வேந்தனும் - வானரத் தலைவனாகிய சுக்கிரீவனும; தூய பூ அணை - தூய்மையான மல ரணைமீது;
பொலிந்து தோன்றினார்- சிறக்க வீற்றிருந்தவர்களாய்; ஆய அன்பினோடு- பொருந்தியுள்ள அன்போடு; அளவளாவுவார் - பேசலாயினர்.
சோலையிலுள்ள மலர்களால் ஆன பூ அனை பிறவற்றினும் பொலிவு மிக்கதாக விளங்கியதால் 'பூ அணைப் பொலிந்து தோன்றினார்' என்றார். அளவளாவுதல்- நெஞ்சம் கலந்து பேசுதல், சோலைவாய் - வாய் ஏழன் உருபு. இராமலக்குவரும் சுக்கிரீவனும் மலரணையில் ஒருங்கமர்ந்து அன்பொடு
உரையாடியமை இப்பாடலில் புலப்படுகிறது.
| ||
மனம் வருந்தி; சிந்தியா - ஆலோசித்து; பின் - பின்னர்; பொருந்தும் நல்மனைக்கு- (சுக்கிரீவனைப் பார்த்து) பொருந்திய நல்ல இல்லற வாழ்க்கைக்கு; உரிய பூவையைஉரியவளான மனைவியை; நீயும் பிரிந்துளாய் கொல் - (என்னைப்போல) நீயும் பிரிந்துள்ளாயோ? என்றான் - என்று
வினவினான்.
விருந்தினனாகிய தன்னைச் சுக்கிரீவன் மனைவி இல்லாமல் உபசரிப்பதைக் கண்டு 'நன்மனைக்குரிய பூவையைப் பிரிந்துளாய் கொல்' என இராமன் வினவினான். மனையாள் இல்லாத இடத்து விருந்தோம்புதல் சிறக்காது என்பர். மகளிரும் விருந்தோம்புதலைத் தலையாய கடனாகக்
கொண்டனர் என்பதை 'வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே?' (67) என்ற அடிகள் உணர்த்தும். ''விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை'' (சிலம்பு - 2 - 16 - 73) என்ற கண்ணகியின் வருத்தமும் விருந்தோம்பலில் மகளிர் பங்கை உணர்த்தும். மனை - இல்லற வாழ்க்கை; இடவாகுபெயர்; பூவை - உவமை ஆகுபெயர்; நீயும் - உம்மை இறந்தது தழுவிய எச்ச
உம்மை. 35
என்ற வேலையில் - என்று இராமன் சுக்கிரீவனை வினவிய பொழுதில்; மாருதி - அனுமன்; குன்று போல எழுந்து நின்று - மலை போல எழுந்து நின்று; இருகை கூப்பினான் - இரண்டு கைகளையும் கூப்பியவனாய்; நின்ற நீதியாய் - (இராமனை நோக்கி) 'நிலை பெற்ற நீதியை உடையவனே! யான் உனக்கு - நான் உனக்கு; உரைப்பது ஒன்று உண்டு - சொல்ல வேண்டுவது
ஒன்று உண்டு; நெடிது கேட்டி - அதனைத் தொடக்கம் முதல் இறுதி வரை கேட்பாயாக'; எனா - என்று கூறி . . . .
தன் மனைவியை இழந்த செய்தியைச் சுக்கிரீவன் தானே கூறுதல் தகுதி அன்று என்று கருதி, அனுமன் அதைக் கூறினான். விருந்தினரை மனைவியுடன் இருந்தே உபசரித்தல் இல்வாழ்வானுக்கு முறை என்பதை உணர்ந்தே இராமன் வினாவினான் என்பதைக் குறிப்பிட 'நின்ற நீதியாய்' என
விளித்தான். 'என்று கூறி' (எனா) என்ற எச்சம் மேல்வரும் அனுமன் கூற்றுகை நோக்கி நின்றது. 36
வாலியின் பெருமை கூறல்
நாலு வேதம் ஆம் - நான்கு வேதங்களாகிய; நவை இல் ஆர்கலி - குற்றமற்ற கடலுக்கு; வேலி அன்னவன் - வேலியைப் போலப் பாதுகாவலாய் உள்ளவனும்; மலையின் மேல் உளான் - கைலாய மலையின்மேல்வீற்றிருப்பவனுமாகிய; சூலி தன் - சூலப்படையுடைய சிவபிரானின்; அருள்
துறையின் - கருணையின் வழியில்; முற்றினான் - முதிர்ந்தவனாகிய; வரம்பு இல் ஆற்றலான் - எல்லையற்ற வலிமை உடையவனாய்; வாலி என்று உளான் - வாலி என்று ஒருவன் உள்ளான்.
பரப்பாலும் பேரொலியாலும் வேதங்கள் ஆர்கலி எனப்பட்டன. சிவபிரான் நான்கு வேதங்களாகவும், வேதப் பொருளாகவும் விளங்கி, வேதங்களைக் காப்பதால் நான்கு வேதங்களுக்கும் வேலி அன்னவன் என்றார். 'நால் வேதன் காண்' (தேவாரம்-6-8-3), 'மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்
தன்னை' (தேவாரம்-6-3-4) என்ற அடிகளைக் காண்க. சூலி - சூலாயுதத்தை உடையவன். அருள்துறையின் முற்றினான் - சிவபிரானின் அருளைப் பெற்றவன் என்பது பொருள். வாலி சிவபக்தன் என்பதை, 'அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்' (3625) ''பஞ்சின் மெல்லடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும், அஞ்சலித்து அறியாச் செங்கை ஆணையாய்'' (4086) என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளாலும், தாரை புலம்பலிலும் (4101) காணலாம். திருவடகுரங்காடு துறை, திருக்குரங்கணில் முட்டம் என்னும் தலங்களில் வாலி சிவபிரானை வழிபட்டதாக அத் தல புராணங்கள்உணர்த்துகின்றன. 37
கழறு தேவரோடு- சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தேவர் களோடு; அவுணர் - அவுணர்களின்; கண்ணின் நின்று - கண்முன் நின்று; உழலும்மந்தரத்து- (மத்தாகிச்) சுழல்கின்ற மந்தரமலையின்; உருவுதேய - வடிவம் தேயவும்; அழலும் கோள் அரா - சீறிக்கோபிக்கும் வலிய (கடைகயிறாகிய)
வாசுகியென்னும் பாம்பின்; அகடு தீ விட - வயிறு நெருப்பைக் கக்கவும்; சுழலும் வேலையை - அலைகின்ற திருப்பாற்கடலை; முன் - முற்காலத்தில்; கடையும் தோளினான் - (தான் ஒருவனாகக்) கடைந்த தோளினை உடையவன்.
வலிமையும் வரங்களும் பெற்று தேவ அசுரர்களால் செய்ய முடியாத செயலை வாலி தான் ஒருவனாகவே செய்து முடித்தான் என்பதால் அவனது பெருவலி பெறப்படுகிறது. திருப்பாற்கடலில் அமுதம் எடுக்க முனைந்த அமரரும் அசுரரும் முயன்று வலியிலராய் நிற்க, அங்கு வந்த வாலி, அவர்கள் வேண்டுதலால் தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச் செய்தான் என்பது வரலாறு. இச்செயலைப் பின்னரும் ''வேலையை விலங்கல் மத்தில், சுற்றிய நாகம் தேய அமுது எழக் கடைந்த தோளான்'' (5257) என்று அனுமன் புகழ்ந்து பேசுவதைக் காணலாம். இவ்வரலாறு காஞ்சிப்புராணத்து மணிகண்டேசுரப் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 38
நிலனும் - நிலமும்; நீரும் - நீரும்; நெருப்பும் - நெருப்பும்; காற்றும்- காற்றும்; என்று ஆய் - என்று பொருந்திய; உலைவு இல் பூதம் - அழிதல் இல்லாத பூதங்கள்; நான்கு உடைய - நான்கினுடைய;
ஆற்றலான் - ஆற்றலைத் தான் ஒருவனே பெற்றவன்; அலையின் வேலை - அலைகளைஉடைய எல்லைப்புறக் கடல்கள்; சூழ் கிடந்த - சூழ்ந்து கிடந்ததான; ஆழிமாமலையின் நின்றும் - பெரிய சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்து; இம்மலையின் வாவுவாம் - இங்குள்ள மலையில்
தாவும் தன்மையுடையவன்.
நிலம் முதலிய நான்கு பூதங்களின் ஆற்றலோடு, சக்கர வாளகிரியினின்று இங்குள்ள மலையில் தாவும் வல்லமையுடையவன் வாலி என்பது உணர்த்தப்பட்டது. பூமியைச் சூழ்ந்துள்ள எல்லாக்கடல்கட்கும் அப்பால் வட்டவடிவமான சக்கரவாள மலை சூழ்ந்துள்ளது என்பது புராண
மரபு. நிலத்திற்கு நீரும், நீர்க்கு நெருப்பும், நெருப்புக்குக் காற்றும், காரணமாதலால் அம்முறைப்படி வைத்தார். ஐந்து பூதங்களுள் ஆகாயத்தைக் கூறாது விடுத்தது, அதற்கு வடிவமும் ஆற்றலும் புலப்படத் தோன்றாமையின் என்க. 39
கிட்டுவார் பொரக் கிடைக்கின் - போர்கருதி தன் எதிரே வருபவர் கிடைக்கப்பெற்றால்; அன்னவர் பட்ட நல்வலம்- அவர்களிடம் உள்ள நல்ல வலிமையில்; பாகம் எய்துவான் - பாதியைத் தான் அடைவான்; எட்டு மாதிரத்து இறுதி - எட்டுத் திக்கு எல்லையிலும்; நாளும் உற்று - நாள்தோறும் சென்று; அட்ட மூர்த்தி - அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபிரானின்; தாள்பணியும் - திருவடிகளை வணங்குகிற; ஆற்றலான் - ஆற்றலையுடைவன்.
வாலி, தன்னொடு போர்செய்வார் வலிமையில் பாதி தனக்கு வருமாறு சிவன்பால் வரம்பெற்றிருந்தான். இதனை 'இரங்கியான் நிற்ப என் வலி அவன் வயின் எய்த வரம் கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற இராவணன் கூற்றாலும் அறியலாம். அட்டமூர்த்திகள் - பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் என்பன. இவ்வெட்டையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின்; சிவபிரான் 'அட்ட மூர்த்தி' எனப்பட்டான். நாளும் எட்டுத் திசைகளுக்குச்
சென்று சிவன்தான் பணிந்து வரும் ஆற்றலை உடையவனாதலின் 'ஆற்றலான்' என்றார். வாலிக்குள்ள வரபலமும், தெய்வபக்தியும் இப்பாடலால் உணர்த்தப்படுகின்றன. 40
அவன் முன்னர் - அந்த வாலியின் வேகத்திற்கு முன்னதாக; கால் செலாது - காற்றுச் செல்லாது; அவன் மார்பில் - அவ்வாலியின் மார்பில்; கந்தவேள் வேல் செலாது - முருகப்பிரானின் வேலும் நுழையாது; வென்றியான் - வெற்றியை உடையவனான அவ்வாலியின்; வால் செலாத வாய் அலது- வால் செல்லாத இடத்தில் அல்லாமல் (வால் சென்ற இடத்தில்); இராவணன் கோல் செலாது - இராவணனது ஆட்சி செல்லாது; அவன் குடை செலாது - அவ்விராவணனது வெற்றிக் குடையும் செல்லாது.
வாலியின் விரைந்த செலவையும், அவனது வன்மை, வென்றிகளையும் இப்பாடல் உணர்த்துகிறது. கால் - காற்று. வலிமையில் சிறந்தவன் வாயு தேவன். அந்தக் காற்றும் வேகத்தில் வாலியின் வேகத்திற்குத் தோற்றுவிடும் என்பது கருத்து. சரவணப் பொய்கையில் ஆறு உருவங்களாய்க் கிடந்து பார்வதிதேவியால் ஓருருவம் ஆக்கப்பட்டமையால் 'கந்தன்' எனப்
பெயர்பெற்றான். கந்தவேள் - இருபெயரொட்டு; கந்தனாகிய வேள். வேள் -வேட்கையை உண்டு பண்ணுபவன். இச்சொல் மன்மதனுக்கும் பெயர் ஆதலால் அதனை விலக்குதற்குக் 'கந்தவேள்' என்றார். கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்த முருகன் வேலும் வாலியின் மார்பைத் துளைக்காது என்பதால் வாலியுடைய மார்பின் வன்மை புலப்படும்.
வென்றியான் - வாலி - இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களையும் வென்ற இராவணனது கோலும் குடையும் வாலியின் வாலி சென்ற இடத்துச்செல்லாது என வாலியின் வீரமிகுதி கூறப்பட்டது. முன் அவ்வாலியின் வாலில் கட்டுண்டு இராவணன் இடர்ப்பட்டவனாதலின், அவ்வாலுக்கு அஞ்சி
அவ்விடம் செல்லமாட்டான்; அவ்வாலுக்கே அஞ்சுபவன் வாலியின் தோள்வலிக்கு எதிர்நிற்கமாட்டான் என்பது கருத்து. வாலியின் வாலுக்கு இராவணன் அஞ்சுபவன் என்பதை ''வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் விளிந்தது அன்றே'' (5888), 'நிறையடிக் கோல வாலின் நிலைமையை நினையுந்தோறும் பறையடிக்கின்ற அந்தப் பயம்மிகப் பறந்ததன்றே' (4084)
என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளால் முறையே அறியலாம். 'வரங்கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்று இராவணன் கூறுவதும் காண்க. பின்னர் வாலியும் இராவணனும் நட்புக்கொண்டனராதலின் இராவணனைக் கொல்வதற்கு வாலியைக் கொல்வது இன்றியமையாதது என்பது புலப்படுகிறது.
41
அவன் - அவ்வாலி; பேருமேல் - இடம் பெயர்ந்து எழுவானானால் (அந்த அதிர்ச்சியில்); மேருவே முதல் கிரிகள் - மேரு முதலிய பெரிய மலைகளெல்லாம்; வேரொடும் பேருமே - வேரொடு இடம் விட்டுப் பெயர்ந்து போகும்; அவன் பெரிய தோள்களால் - அவனது பெரிய தோள்களால்; நெடுங்காரும், வானமும் - பெரிய மேகங்களும், ஆகாயமும்; கதிரும் நாகமும் - சூரிய, சந்திரர்களும், விண்ணுலகமும்; தூருமே - மறைந்து போய்விடும்.
வாலி இயல்பாக அடிவைத்துச் செல்லுகையில் அவ்வதிர்ச்சியைத் தாங்காது பெரிய மலைகளும் நிலைகுலைந்துவிடும் என அவனது வேகத்தின் பெருமை கூறப்பட்டது. அவனுடைய தோள்கள் மிக உயர்ந்து நிற்றலால், மேகம் முதலியன அத்தோள்களில் மறையும் என அத்தோள்களின் பருமையும்
நெடுமையும் உயர்வுநவிற்சி உத்தியால் உணர்த்தப்பட்டன.
'பெயருமேல் நெடும்பூதங்கள் ஐந்தொடும் பெயரும்' (6201) என்ற இரணியன் ஆற்றலை ஒப்பிட்டுக்காண்க. மேருவே - ஏகாரம் உயர்வு சிறப்பு; பேரும் - பெயரும் என்பதன் மரூஉ. 42
| ||||||||||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக