புதன், 1 ஜூன், 2011

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம்
13. கட்டுரை காதை

மதுராபதி தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல் .

சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண் கண் தவள வாள் முகத்தி - சடையிடத்து இளம்பிறை தங்கிய சென்னியினையும் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களையும் வெள்ளிய ஒளி பொருந்திய முகத்தினையுமுடையாள்,

கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி -

கடைவாய்ப் பல் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாள், இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி -

தம்மிடத்து நிலவொளி பரந்த முத்துப் போன்ற பற்களையுடையாள்,

இடமருங்கு இருண்ட நீலமாயினும் வலமருங்கு பொன நிறம் புரையும் மேனியள் -

இடப்பாகம் இருளின் தன்மை கொண்ட நீல உருவாக இருப்பினும் வலப் பாகம் பொன்னுருப் போன்ற வடிவுடையாள்,

இடக்கை பொலம் பூந் தாமரை ஏந்தி னும் வலக்கை அம் சுடர்க் கொடுவாள் பிடித்தோள் - இடக்கையில் பொன்னிறமான பொலிவுற்ற தாமரை மலரை ஏந்தி இருப்பினும் வலக் கையில் அழகிய ஒளி விடுகின்ற மழுப்படையை ஏந்தினாள்,

வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள் - வலக்காலின்கண் தொழிலமைந்த வீரக் கழலைக் கட்டியிருப்பினும் இடக்காலில் ஒப்பற்ற சிலம்பு ஒலிக்குந் தன்மையுடையாள் (அவள்),

கொற்கைக் கொண்கன் - கொற்கைத் நகரத் தலைவனும்,

குமரித் துறைவன் - குமரியாற்றுத் துறையை யுடையோனும்,

பொற்கோட்டு வரம்பன் - இமயமலையை தன் ஆட்சியின் வடவெல்லையாக உடையோனும், பொதியிற் பொருப்பன் - பொதியமலையையுடையோனுமாகிய பாண்டியனுடைய,

குலமுதற் கிழத்தியாதலின் -குலத்தினை அடி தொடங்கியே காக்கும் உரிமை பூண்டோளாகலான் ; 13


அலமந்து - மயங்கி, ஒரு முலை குறைத்த திருமா பத்தினி - இடமுலையைத் திருகி வாங்கிய அழகிய பெருமை மிக்க கற்புடையளாய,

அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன் முன்னிலைஈயாள் பின்னிலைத் தோன்றி - துன்பத்தாற் சுழல்கின்ற முகத்தினையும் ஆய்ந்து செய்த அணியினையும் உடைய கண்ணகியின் எதிரே நில்லாளாய்ப் பின்புறத்தே வந்து நின்று,

கேட்டிசின் வாழி நங்கை என் குறை என - நங்காய் என் குறையினைக் கேட்பாயாக என்று கூற ;
௧௩உரை 17
கண்ணகியின் வினா

வாட்டிய திருமுகம் வல வயின் கோட்டி - தனது வாட்டங்கொண்ட முகத்தினை வலப்பக்கத்தே வளைத்து நோக்கி்,

யாரை நீ என் பின் வருவோய் - என் பின்னர் வருகின்றோய் நீ யார்,

என்னுடை ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என -
என்னுடைய பொறுத்தற்கரிய மன வருத்தத்திற்குக் காரணமான துன்பத்தினை நீ அறிவாயோ என்று கண்ணகி கேட்ப ;
18உரை 20

மதுராபதி சொல்லிய செய்திகள் தீவினை வந்த வகையைக் கூறுதல்

ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி இழாஅய் - அழகு செய்யும் அணிகலங்களை யுடையாய் நின் பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் அறிந்தேன்,

மா பெருங் கூடல் மதுராபதி என்பேன் - மிக்க சிறப்பினை யுடைய கூடற்கண் உள்ளேன் மதுராபதி என்னும் பெயருடையேன்,

கட்டுரை யாட்டியேன் - நினக்குச் சில சொல்லுதலுடையேன்,

யான் நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யான் நின்கணவன் கொலையுண்டது காரணமாக அடைந்த கவலையை உடையேன், பைந்தொடி கேட்டி - ஆயினும் நீ இதனைக் கேட்பாயாக ;
21உரை24

பெருந்தகைப் பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் -

பெரிய தகுதியையுடைய பெண்ணே என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக ; தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை - தோழி நீ எம் மன்னனாகிய பாண்டியனுக்குப் பழவினை வந்தெய்திய வகையாகிய இஃதொரு பொருளைக் கேட்பாயாக ;27உரை௨௮

மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்குத் தீதுற வந்த வினை -

நங்காய் உன் கணவனுக்குத் தீமை பொருந்த வந்து எய்திய வினையாகிய இவ் வொன்றினைக் கேட்பாயாக ;

பாண்டியர் குலத்தின் இயல்பு உரைத்தல்

காதின் மறை நா ஓசையல்லது - தன் காதுகளால்,

அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற வேதவொலியினைக் கேட்டறிந்த தல்லது.

யாவதும் மணி நா ஓசை கேட்டதும் இலாநீ-

ஒரு பொழுதும் மணியின் நாவோசையைக் கேட்டறியான்,


அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - அவன் தன்னடிகளைக் கையாற்றொழுது தலை வணங்காத பகையரசர் பழி கூறித் தூற்றப்பெறினல்லது,


குடி பழி தூற்றுங் கோலனும் அல்லன்-
குடிக்க பழி கூறித் தூற்றப்பெறும் கொடுங்கோலுடையனுமல்லன்

இன்னும் கேட்டி - மேலும் அவர் உயர்குணத்தைக் கேட்பாயாக ; ; 30உரை3௫


நல் நுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் - நல்ல நெற்றியினையுடைய மகளிர் தம் எழில் பொருந்திய பார்வையானே,

மத முகம் திறப்புண்டு - தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு,


இடம் கழி நெஞ்சத்து இளமை யானை - வரம்பு கடந்து செல்லும் உள்ளத்தினையுடைய இளமையாகிய யானை,

கல்விப் பாகன் கை அகப்படா அது ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் -

கல்வியாகிய பாகனுக்கு உட்படாது தளராத ஊக்கத்தோடே ஓடினும்,

ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது -
நல்லொழுக்கத்தோடே ஒன்றிய இச் சிறந்த குடியின்கண் தோன்றியோர்க்குக் குற்றத்தினைச் செய்யாது ;35உரை௪௧

கை குறைத்த கொர்ர்ர்ரவா

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் -
ஒருநாள் தான் ஓரில்லத்து வாயிற் கதவினைத் தட்டினானாக அதன்பொருட்டு அவ்வில்லத்து வாழும் பிறர்க்கு உதவுவதற்கொண்ணாத வறுமை வாழ்க்கையினை உடைய கீரந்தை என்பானுடைய மனைவி,

அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி - நீர் போகின்ற அக் காலத்து மன்னனுடைய காவல் அல்லாது வேறு குற்றம் தீர்ந்த காவல் சிறிதும் இல்லையென்று கூறி என்னை அரணில்லாத வீட்டில் இருக்கச் செய்து போயினீர்,

இன்று அவ் வேலி காவாதோ என-

இப்பொழுது அவ் வரைச வேலி என்னைக் காத்திடாதோ என்று கூறி வருந்த ;
42உரை௪௭

செவிச் சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் -
அச் சொல் காதினைச் சுடுவதாகிய ஆணியைப் போன்று புகைகின்ற தீ மூண்டு உள்ளத்தைச் சுடலானே,

அஞ்சி நடுக்குற்று - அச்சமும் நடுக்கமு மடைந்து,

வச்சிரத் தடக்கை அமரர் கோமான் - வச்சிரப் படை ஏந்திய பெரிய கையினையுடைய இந்திரனுடைய,

உச்சிப் பொன்முடி ஒளி வளை உடைIத்த கை குறைத்த செங்கோல் -
தலையிலுள்ள அழகிய முடியின்கண் ஒளி பொருந்திய வளையினை உடைத்த கையினைத் துணித்த செங்கோலினையும்,

குறையாக் கொற்றத்து - அதனாலாய குறைவுபடாத வெற்றியினையும் உடைய,

இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை - அரசர் குடியிற் பிறந்த இப் பாண்டியர்களுக்கு வழுவுதல் இல்லையாகும் ;48உரை௫௩


வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு பராசுரன் சேரனைக் காணச் சென்று, பார்ப்பனவாகை சூடி, மீளுதல்

இன்னும் கேட்டி நன்வாய் ஆகுதல் - இது நன்றாகிய மெய்யாதலை இன்னும் கேட்பாயாக ;(பெருஞ்சோறு பயந்த ...... பிற்படச் சென்று) அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறநூலினை அறிந்து அதற்கேற்ப நிற்கும் செங்கோலையும் வீரவழியிலே ஒழுகிய நெடிய வாளினையும் உடைய,

புறவு நிறை புக்கோன் - புறாவின் பொருட்டுத் துலாம் புக்கோனும்,

கறவை முறை செய்தோன் - ஆவின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டு முறை செய்தோனும் ஆய,

பூம்புனற் பழனப் புகார் நகர் வேந்தன் - பொலிவுற்ற நீரினையுடைய வயல்கள் நிறைந்த புகார் நகரத்தையுடைய சோழனது,

தாங்கா விளையுள் நன்னாடதனுள்- நிலம் பொறாத விளைவினையுடைய நல்ல சோணாட்டின்கண்,


வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - அறிவில் வல்ல பரா சரனென்னும் அந்தணன், பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை - பாரதப்போரில் பெருஞ் சோறளித்த திருந்திய வேலேந்திய பெரிய கையினையும்,

திரு நிலைபெற்ற பெருநாளிருக்கை - செல்வம் நிலைபெற்ற பெருமை மிக்க காலையோலக்கத் தினையுமுடைய,

குலவு வேற் சேரன் கொடைத் திறங்கேட்டு - விளங்கும் வேலினையுடைய சேரனது கொடையின் இயல்பினைக் கேள்வியுற்று,

வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த திண் திறல் நெடுவேல் சேரலன் காண்கு என -

வளவிய தமிழுணர்ந்த அந்தணனுக்குத் துறக்கத்துறைதலைத் தந்த உறுதியான வலி மிக்க நீண்ட வேலினையுடைய சேரனைக் காண்பேன் என்று கருதி,


காடும் நாடும் ஊரும் போகி - காடு நாடு ஊர் இவைகளைக் கடந்து,

நீடு நிலை மலையம்பிற்படச் சென்று -

உயர்ந்த நிலையினையுடைய பொதியின்மலைபிற்படும்படி போய்;55உரை௬௬

ஆங்கு - அவ்விடத்தே,

ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் வீடுபேற்றினை விரும்பும் கொள்கையினையும் இரண்டு பிறப்பினையும் உடையாராகிய, முத்தீச் செல்வத்து -

மூன்று வகைப்பட்ட தீயை வளர்க்குஞ் செல்வத்தோடே,

நான் மறை முற்றி - நான்கு மறைகளையும் முற்ற அறிந்து,

ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்தாகிய பெருமையுடைய வேள்விகளைச் செய்தலாகிய தொழிலையும் பேணும்,

அறு தொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க -


ஆறுதொழிலினையுடைய அந்தணர் பெறுகின்ற முறையை அப் பராசரனுக்கு வகைப்படுத்திக் கூற ; 66உரை70

நா வலங்கொண்டு - நாவானே தருக்கித்து வெற்றி கொண்டு,

நண்ணார் ஓட்டி - பகைவர்களை ஓடச் செய்து,

பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகையைச் சூடி,

ஏற்புற நன்கலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன் - பொருத்தமுற நல்ல அணிகலங்களைப் பெற்றுத் தன் ஊர்க்கு மீண்டு செல்வோன் ;
71உரை௭௩


திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்தங்கால் என்பது ஊரே - செங்கோலினையுடைய பாண்டியனுடையதிருந்திய செயலினையுடைய அந்தணர்களது ஊர் திருத்தங்கால்என்பது,

அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து -

அவ்வூரின்கண் பசிய இலை தழைந்த அரசு நிற்கும் மன்றத்தின் கண்,

தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் -

தண்டினையும்கமண்டலத்தினையும் வெள்ளிய குடையினையும் சமித்தையும்,

பண்டச் சிறு பொதி பாதக் காப்பொடு - பண்டங்களையுடையசிறிய மூட்டையினையும் மிதியடியுடன்,

களைந்தனன்இருப்போன் - கீழே வைத்திருப்போனாகிய அவன் ;74உரை௭௯

காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி -

குடிகளைக் காக்கும் வெண்கொற்றக் குடையினையும் அறநெறியால் உண்டாகி முதிர்ந்த வெற்றியையுமுடைய மேலோன் வாழ்வானாக,


கடற் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலின்கண்ணே பகைவர் கடம்பினைத் தடிந்த மன்னவன் வாழ்வானாக,

விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலைக்கண் வில்லெழுதிய காவலன் வாழ்வானாக,

பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - பொலிவு பெற்ற தண்ணிய பொருநையாற்றினையுடைய பொறையன் வாழ்வானாக,

மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலாகிய அரசன் வாழ்வானாக வெனச் சொல்ல ;
79உரை84 தமர் முதல் நீங்கி - தம் சுற்றத்தாரினின்றும் நீங்கி,

குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை ஆயத்து - குழலினையும் குடுமியினையும் நிரம்பாத சொல்லையுடைய சிவந்த வாயினையும் தளர்ந்த நடையினையும் உடைய கூட்டத்துடன்,

விளையாடு சிறாஅர் எல்லாஞ் சூழ்தர - விளையாடுகின்ற சிறுவர் யாவரும் அவ் வந்தணனைச் சூழ்ந்துகொள்ள ;
85உரை87

குண்டப் பார்ப்பீர் - அந்தணச் சிறுவர்களே,

என்னோடு ஓதி என் பண்டச் சிறு பொதிகொண்டு போமின் என - னுடனே மறையினையோதி என்னுடைய பண்டங்கள் வைத்த சிறிய மூடையினை நீவிர் பெற்றுச் சென்மின் என்று அவன் கூற ; 88உரை89
90உரை94
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் - பெருமையமைந்த சிறப்பினையுடைய வார்த்திகன் என்பான் புதல்வனாகிய,

ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் - தக்கிணாமூர்த்தி என்னும் பெயர்பெற்று வளர்ந்தவன்,

பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால் தோன்றும் சிவந்த வாயினையுடைய தன்னையொத்த இளையோர் முன்பு,

தளர்நா ஆயினும் மறை விளி வழாஅது உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத - தளர்வுறும் நாவினையுடையனாயினும் மறையின் ஓசையை முறை பிறழாது உள்ளத்து நிறைந்த மகிழ்ச்சியுடன் அவனோடு ஒருபடித்தாக ஓதுதலைச் செய்ய ;
95உரை௯௮

தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - மறையினைத் தன்னோடொப்ப ஓதிய தக்கிணாமூர்த்தியாகிய சிறுவனைப் பராசரன் வியந்து பாராட்டி,

முத்தப் பூணூல் - அழகிய பூணூலையும்,

அத் தகு புனைகலம் - அத் தகுதி வாய்ந்த புனையும் அணிகலங்களையும,

் கடகம் தோட்டொடு கையுறை ஈத்து - கைவளையும் தோடுமாகிய இவற்றுடனே பரிசிலாகக் கொடுத்து,

தன் பதிப்பெயர்ந்தனன் ஆக - தன்னகரத்து மீண்டானாக ;

வார்த்திகனைச் சிறையிட, ஐயை கோயிலின் கதவம் திறவாமை
98உரை103
நன் கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅராகி - அத் தக்கிணாமூர்த்தி நல்ல அணிகலங்கள் புனைபவற்றையும் பூண்பவற்றையும் பொறாதவர்களாய்,

வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகனைக் காவல் செய்து பற்றி, கோத் தொழில் இளையவர் கோ முறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என - அரசனேவல் செய்யும் காவலர் அரச நீதியில்லாது புதையலைக் கவர்ந்த பார்ப

்பான் இவனென்று கூறி,

இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - கள்வரை இடும் சிறைக் கண்ணே இவனை இட்டு அடைத்தனராக ;
104உரை108
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் - அங்ஙனம் சிறையிடப் பெற்ற வார்த்திகனுடைய மனைவியாகிய கார்த்திகை என்னும் பெயருடையாள்,

அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்திற் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் - மயங்கி ஏக்கம் கொண்டு நிலத்தில் வீழ்ந்தழுது கடவுளை வெறுத்துப் பூமியிற் புரண்டு வெகுண்டனள்,

அது கண்டு - அதனை யுணர்ந்து,

மை அறு சிறப்பின் ஐயை கோயிற் செய் வினைக் கதவம் திறவாது - குற்றமற்ற சிறப்பினையுடைய துர்க்கையின் கோயிற்கண் செயற்க

ுரிய தொழிலெல்லாம் முற்றுப் பெற்ற கதவம் திறவாதாயிற்று ;

வார்த்திகனைச் சிறை விடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை

108உரை112
ஆகலின் - ஆகையால்,

திறவாது அடைத்த திண்நிலைக் கதவம் - அங்ஙனம் திறவாது மூடிய திணிந்த நிலையினையுடைய கதவினை,

மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - வீரஞ் செறிந்த வேலினையுடைய பாண்டியன் கேட்டு மயக்குற்று,

கொடுங் கோல் உண்டுகொல் - எனது கோல் கோடியது உண்டோ,

கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்ன - ஐயைக்குப் பொருந்திய துன்பத்தின் எவ்வாற்றானும் உணர்ந்து எதற்குக் கூறுமின் என்று கூற ;

113உரை114
ஏவலிளையவர் காவலற் றொழுது - அரசனேவல் செய்யுங் காவலர் மன்னனை வணங்கி,

வார்த்திகற் கொணர்ந்த வாய் மொழியுரைப்ப - வார்த்திகனைக் கொண்டு வந்து சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் கூற ;
115உரை122
நீர்த்து அன்று இதுவென நெடுமொழி கூறி - இச்செயல் நீர்மையுடைத்தன்று என்று வார்த்திகனைப் புகழ்ந்து கூறி,

அறியா மாக்களின் முறை நிலை திரிந்த - அறிவில்லாத காவலரால் முறை செய்யும் நிலையினின்றும் வேறுபட்ட,

என் இறை முறை பிழைத்தது - என்னுடைய அரச நீதி தவறுற்றது,

பொறுத்தல் நும் கடன் என - அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும் என்று கூறி,

தடம் புனற் கழனித் தங்கால் தன்னுடன் - பெரிய நீர் சூழ்ந்த வயல்களையுடைய திருத்தங்கால் என்னும் ஊருடனே,

மடங்கா விளையுள் வயலூர் நல்கி - குறைவுபடாத விளைவினையுடைய வயலூரையும் கொடுத்து,

கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - கார்த்திகையின் கணவனாகிய வார்த்திகன் முன்பு பெரிய பார் மடந்தைக்குத் தனது அழகிய மார்பினை அளித்து,

அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே - அந் நிலமடந்தையின் நீங்காத விருப்பத்தினையும் சிறிதளவு தணித்தனன் ;
123உரை௧௨௫

நிலைகெழு கூடல் நீள் நெடு மறுகின் - நிலைத்தல் பொருந்திய கூடல் நகரத்து மிக நீண்ட தெருக்களில் உள்ள,

மலை புரை மாடம் எங்கணுங் கேட்ப-மலையினையொத்து உயர்ந்த மாளிகைகள் எவ்விடத்தும் கேட்கும் வண்ணம்,

கலை அமர் செல்வி கதவம் திறந்தது - கலையை ஊர்தியாக விரும்பிய கொற்றவை கோயிலின் கதவு திறந்தது ;
126உரை132
சிறைப்படு கோட்டம் சீமின் - குற்றஞ் செய்தோரையும் பகைஞராய்ப் பற்றப்பட்டோரையும் காவற் படுத்தியிருக்கும் சிறைக்கோட்டத்தினைத் திறந்திடுமின்,

யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்மின் - எத்துணையாயினும் இறை இறுத்தற்குரிய மக்களது இறையினை விடுதலை செய்யுமின்,


இடுபொருளாயினும் படுபொருளாயினும் உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என - பிறர் வரவிட்ட பொருளாயினும் புதையற் பொருளாயினும் அவை எடுத்தார்க்கும் கொண்டார்க்கும் உரிமையுடையனவாம் என்று, யானை,


ஏருத்தத்து அணிமுரசு இரீஇக் கோல் முறை அறைந்த கொற்ற வேந்தன் - யானையின் பிடரில் அழகிய முரசினை இருத்தி அரச நீதியாகக் கூறிய வெற்றியினையுடைய மன்னன், தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ - நீதி தவறிய தகுதிப்பாட்டையும் நீ கேட்பாயாக ;


சோதிட வார்த்தை
133உரை137
ஆடித் திங்கள் பேர்இருட் பக்கத்து அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து - ஆடித்திங்களின் கிருட்டின பக்கத்து
குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று,

ஒள் எரி உண்ண - விளக்க மமைந்த தீக் கதுவலானே,

உரை சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடியோயே - புகழ் மிக்க மதுரைநகரத்தோடே அரசன் கேடெய்துவான் என்னும் சொல்லும் உண்டாயிற்று நிரைத்த தொடியினையுடையாய் ;

பாண்டியன் முறை பிழைத்த காரணம்கோவலனது முற்பிறப்பு வரலாறு
138உரை146
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு - மணம் நிறைந்த சோலை சூழந்த கலிங்கநாட்டின்கண்,


தீம் புனற் பழனச் சிங்கரபுரத்தினும் காம்பு எழு கானக் கபிலபுரத்தினும் - இனிய நீர் நிறைந்த மருதநிலம் பொருந்திய சிங்கபுரத்தின்கண்ணும் மூங்கில் நிறைந்த காடுகளையுடைய கபிலபுரத்தின்கண்ணும்,


அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் வடிவேல் தடக்கை வசுவும் குமரனும் - அரசாளும் செல்வத்தினையுடைய ஒழுங்குபடத் தொடுத்த மாலை அணிந்த அரசராகிய திருத்திய வேலினை ஏந்திய பெரிய கையினையுடைய வசுவென்பானும் குமரனென்பானும், வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் - என்றுங் கெடாத செல்வத்தினையுடைய சிறந்த குடிக்கண் தோன்றிய தாயத்தாராவர்,


தம்முள் பகை யுற - அத் தாயவேந்தரிருவரும் தங்களுள் பகையுற்றமையான், இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - ஆறு காவதத்திற்கு இடைப்பட்ட நிலத்து எவ்விடத்தும்,


செருவெல் வென்றியிற் செல்வோர் இன்மையின் - ஒருவரை யொருவர் வெல்லும் வெற்றியின் பொருட்டு அமர் நிகழுகை காரணமாகப் போவார் ஒருவரும் இல்லாமையான் ;


147உரை151
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து - பெறுதற்கரிய செல்வத்தினை ஈட்டும் விருப்பத்தானே சிறந்த அணிகலங்களைச் சுமந்து,

கரந்து உறை மாக்களின் - மறைந்துறையும் மக்களைப்போலப் போந்து,

காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர் அங்காடிப்பட்டு - தன் மனைவியோடும் அழியாத வளவிய புகழினையுடைய சிங்கபுரத்திலுள்ள ஓர் கடைவீதியுள் புக்கு,

அருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை - விலையிடற்கரிய அணிகளை விற்குஞ் சங்கம னெனப்படுகின்ற வணிகனை ;
152உரை157

முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் - பசிய தொடியினையுடையாய் முற்பிறவியில் நின் கணவன்,

வெந்திறல் வேந்தற்குக் கோத் தொழில் செய்வோன் - வெவ்விய வலியமைந்த வசுவென்னு மரசனுக்கு அரச வினை செய்பவன்,

பரதன் என்னும் பெயரன் அக் கோவலன் - கோவலனாகிய பரதன் என்னும் பெயரினையுடைய அவன்,

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் - கொல்லா விரதத்தினின்றும் விலகிய வெறுக்கப்படுவோனாதலான்,

ஒற்றன் இவன் எனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - இவன் பகை மன்னன் ஒற்றனாவான் எனப் பிடித்துச் சென்று வெற்றி தரும் வேலினையுடைய தன் அரசனிடத்து காட்டிக் கொலை செய்த போது ;
158உரை166
கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் நீலி என்போள் - கொலைக்களத்துப் பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் நிலையிடத்தைக் காணாளாய்.,

அரசர் முறையோ பரதர் முறையோ - அரசர்காள் வணிகர்காள் இது நீதியோ,

ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - ஊரிலும் சேரியிலும் உள்ளீர் இது நீதியோ,
என்று கூறி,

மன்றினும் மறுகினும் சென்றனள் பூசல் இட்டு - மன்றத்திலும் வீதியிலும் சென்று யாவருமறிய வெளியிட்டு,

எழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - பதினான்கு நாள் சென்றபின் கணவனை வணங்கற்குரிய நாள் இதுவென்று கருதி மிகுதியாகப் போற்றி, மலைத்தலை ஏறி -மலை யுச்சியிடத்து ஏறி,

ஓர் மால் விசும்பு ஏணியிற் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - ஒப்பற்ற பெரிய வானெல்லையில் கொலையிடத்துப்பட்ட தன் கணவனைக் கூடுவதாக நின்றவள் ;
167உரை170
எம் உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இம் மிக்க துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையானும் இத் தகைய துன்பம் தம்மை அடையப் பெறுவார்களாக என்று,

விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - விழுகின்றவள் இட்ட தவறுதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள் ;


மதுராபதியின்
171உரை172
உம்மை வினை வந்து உருத்தகாலை செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிற் செய்த தீவினை பயனளிக்க நேர்ந்த பொழுது அக் காலத்துச் செவ்விய உள்ளமிலராயினார்க்கு முன்செய்த நல்வினை சிறிதும் உதவாது ;

173உரை178
வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு தழைந்த கூந்தால் நின் கணவனை, ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர்,

வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல் என - தேவர்களுடைய வடிவத்துக் காண்பதல்லது இவ்வுலக மக்களுடைய வடிவத்துக் காணுதல் இல்லையென்று, மதுரை மா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்ட பின் - மதுரைத் தெய்வமாகிய பெருமையுடைய மதுராபதி பெருமை மிக்க கற்புடைய கண்ணகிக்கு ஊழ்வினையின் தன்மையினைச் சொல்லித் தீயின் விடுதலையைக் கொண்ட பின்னர் ;


கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, திருச்செங்கோடு சேர்தல்
179உரை183
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என -

பொருந்திய கணவனைக் காணாததன் முன்னர் இருத்தலையுஞ் செய்யேன் நிற்றலையுஞ் செய்யேன் என்று கூறி,

கொற்றவை வாயிற் பொன் தொடி தகர்த்து - துர்க்கையின் கோயில் வாயிலில் பொலிவு பெற்ற தன் சங்கவளையலை உடைத்து,

கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு என - நகரத்துக் கீழ்த்திசைக்கண் வாயிலில் கணவனொடு புக்க யான் மேல்திசையிலுள்ள வாயிலில் தனியேனாய்ச் செல்கின்றேன் என்று சொல்லி ;
184உரை190
இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவு நீர் வையை ஒருகரைக் கொண்டு - இரவு இது பகல் இஃதென்று பகுத்தறியாது செயலற்று மயங்கி ஒலிக்கும் நீர் நிறைந்த வையை யாற்றின் ஒருகரையில் செல்லலுற்று,


ஆங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் - அப்போது பதறி இறங்கலாற் பள்ளங்கள் என்று பாராள்,

மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின் - தன் கணவனிடத்து உள்ளம் வைத்து ஏறலானே மேடுகள் என்று பார்க்கிலள்,

கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து - கடலின் நடுவிடத்தைக் கிழித்துக் கிரவுஞ்சம் என்னும் மலையின் நெஞ்சினைப் பிளந்து,

ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல் - அவ்விடத்தே அசுரரை வென்ற ஒளி விடும் தகட்டு வடிவாய நீண்ட வேலினையுடைய,

நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - முருகனது குன்றத்து அடிவைத்து நடந்து உயரச் சென்று ;

கண்ணகி கோவலனோடு வான ஊர்தியில் செல்லுதல்
191உரை200
பூத்த வேங்கைப் பொங்கர்க்கீழ் ஓர் தீத்தொழிலாட்டியேன் யான் என்று ஏங்கி - மலர்ந்த கொம்புகளையுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று யான் ஒப்பற்றயுடையேன் என்று சொல்லி,

எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர்,

தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி - தான் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள் இதுவாகுமென்று அவனை மிகவும் வாழ்த்தி,


பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி - பெருமை மிக்க கண்ணகியின் பெரும் புகழைச் சொல்லி,

வாடா மா மலர் மாரி பெய்து - வாடாத பெரிய பூ மழையைச் சொரிந்து,


ஆங்கு அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்த - இந்திரன் தமராய வானோர் ஆங்கு வந்து துதிக்க, கான் அமர் புரி குழற் கண்ணகி தான் - மணந் தங்கிய புரிந்த கூந்தலையுடைய கண்ணகி,

கோ நகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான ஊர்தி ஏறினள் - மதுரையார் கொலை செய்த தன் கணவனாகிய கோவலனோடு தேவ விமானத்தில் ஏறித் துறக்கம் புக்கனள் என்க.


பொங்கர் - மரக்கொம்பு. குன்றத்துக் குறத்தியர் கேட்கத் தீவினையாட்டியேன் யான் என்றாள். ஏங்கி என்பது ஈண்டுச் சொல்லி என்னும் பொருட்டு ; சொல்லி ஏக்கமுற்று எனலுமாம். பதினாலாம் நாட் பகற்பொழுது சென்ற பின் என்பர் அரும்பதவுரையாசிரியர். பெயர் - புகழ் ; பெயரை மந்திரமாகச் சொல்லி என்றுமாம். நகர், ஆகுபெயர். அமரர்க் கரசன் தமர் என்றமையால் இந்திரனுக்கு விருந்தாயின ரென்பது பெற்றாம். கோவலன் தன்னொடு என்றமையால் அவனும் அவருடன் போந்தமை பெறப்படும்.இக் காதையுள் முன் நீலியின் செய்கை கூறிய விடத்தும் "எழு நாளிரட்டி.........வாழ்த்தி" என்னும் இரண்டடியும் வந்துள்ளமை காண்க. அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்திப் பெய்து ஏத்த எனவும், கண்ணகி தோன்ற வாழ்த்திக் கோவலன்தன்னொடு வானவூர்தி ஏறினள் எனவும் இயையும். மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகி பால் வந்து தனது வருத்தத்தைத் தெரிவித்துப் பாண்டியனுடைய செங்கோன்மையை விரித்துரைத்துக் கோவலன் கொலையுண்டமைக் கேதுவாகிய பழவினையின் உண்மையைத் தெரிவித்து, 'இற்றைக்குப் பதினாலாம் நாள் பகல் சென்றபின் தேவ வடிவிற் கணவனைக் காண்பாய்' என்று கூறிச் செல்ல, கண்ணகி வையைக்கரையின் வழியே சென்று திருச்செங்குன்றென்னும் மலையை அடைந்து வேங்கைமரத்தின்கீழே நின்று பதினாலாம் நாளெல்லை கழிந்து இந்திரன் தமர் வந்து ஏத்தக் கோவலனோடும் வானவூர்தி ஏறிச் சென்றாளென்க.








1 கருத்து:

  1. //கழிந்து இந்திரன் தமர் வந்து ஏத்தக் கோவலனோடும் வானவூர்தி ஏறிச் சென்றாளென்க.//
    இதற்கு பொருள் தருக!! //இந்திரன் தமர் வந்து //

    பதிலளிநீக்கு