சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் - 13. கட்டுரை காதை
1. சடையிடத்து இளம்பிறை தங்கிய சென்னியினையும் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களையும் வெள்ளிய ஒளி பொருந்திய முகத்தினையுமுடையாள், கடைவாய்ப் பல் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாள், தம்மிடத்து நிலவொளி பரந்த முத்துப் போன்ற பற்களையுடையாள்,
இடப்பாகம் இருளின் தன்மை கொண்ட நீல உருவாக இருப்பினும் வலப் பாகம் பொன்னுருப் போன்ற வடிவுடையாள், இடக்கையில் பொன்னிறமான பொலிவுற்ற தாமரை மலரை ஏந்தி இருப்பினும் வலக் கையில் அழகிய ஒளி விடுகின்ற மழுப்படையை ஏந்தினாள், வலக்காலின்கண் தொழிலமைந்த வீரக் கழலைக் கட்டியிருப்பினும் இடக்காலில் ஒப்பற்ற சிலம்பு ஒலிக்குந் தன்மையுடையாள் (அவள்), கொற்கைத் நகரத் தலைவனும், கொற்கைத் நகரத் தலைவனும், இமயமலையை தன் ஆட்சியின் வடவெல்லையாக உடையோனும், பொதியமலையையுடையோனுமாகிய பாண்டியனுடைய, குலத்தினை அடி தொடங்கியே காக்கும் உரிமை பூண்டோளாகலான் ;மயங்கி, இடமுலையைத் திருகி வாங்கிய அழகிய பெருமை மிக்க கற்புடையளாய,துன்பத்தாற் சுழல்கின்ற முகத்தினையும் ஆய்ந்து செய்த அணியினையும் உடைய கண்ணகியின் எதிரே நில்லாளாய்ப் பின்புறத்தே வந்து நின்று,நங்காய் என் குறையினைக் கேட்பாயாக என்று கூற ;தனது வாட்டங்கொண்ட முகத்தினை வலப்பக்கத்தே வளைத்து நோக்கி், என் பின்னர் வருகின்றோய் நீ யார், என்னுடைய பொறுத்தற்கரிய மன வருத்தத்திற்குக் காரணமான துன்பத்தினை நீ அறிவாயோ என்று கண்ணகி கேட்ப ;அழகு செய்யும் அணிகலங்களை யுடையாய் நின் பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் அறிந்தேன், மிக்க சிறப்பினை யுடைய கூடற்கண் உள்ளேன் மதுராபதி என்னும் பெயருடையேன்,நினக்குச் சில சொல்லுதலுடையேன், யான் நின்கணவன் கொலையுண்டது காரணமாக அடைந்த கவலையை உடையேன், ஆயினும் நீ இதனைக் கேட்பாயாக ;பெரிய தகுதியையுடைய பெண்ணே என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக ;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக