திங்கள், 2 செப்டம்பர், 2013

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்


              சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

சிறுகதையின் தோற்றம்

காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர். கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும், அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் கேட்டதையும் விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது போக்கிற்குத் துணை நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’ என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும் மரபும் நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி, பொய்க்கதை, புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் ‘பாட்டி கதை’ சொல்லும் மரபு உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்து வந்துள்ளது.
பின்பு ‘எழுத்து மரபு’ ஏற்பட்ட போது, கதைகள் பெரிய எழுத்துக் கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்சு இயந்திர வருகைக்குப் பின்னர், அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன. இன்றும், அவை பெரிய எழுத்துக் கதைகள் என்ற பெயரில் விற்பனையில் உள்ளன. அல்லி அரசாணி மாலை, புலந்திரன் கதை, வீர அபிமன்யு, மயில் இராவணன் கதை, சதகண்ட இராவணன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை என்று இக்கதைகள் பல.
மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும், கீழை நாடான ரஷ்யாவிலும் சிறுகதை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி, ஓர் உணர்ச்சி, ஓரிரு பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, அரைமணி நேரத்தில், ஒரே அமர்வில் படித்து முடித்துவிடக் கூடிய கதைகள் தோற்றம் பெற்று அச்சேறின. ஆங்கிலக் கல்வியின் காரணமாக, நம்மவர்களும் அதே போன்ற கதை மரபை நம்மிடையே உருவாக்கத் தொடங்கினர். இப்படித் தொடங்கியதுதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு.
2.1.1 உலக மொழிகளில் சிறுகதையின் தோற்றம்
உலக நாடுகளில், மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் தான் சிறுகதை மிக விருப்பமான இலக்கிய வடிவமாகப் போற்றப்படுகிறது. நாவலை விடச் சிறுகதைக்கே அங்குச் செல்வாக்கு அதிகம். பிராங்க் ஓ கானர் (Frank O ‘Connor) என்ற சிறுகதை விமர்சகர், "அமெரிக்கர்கள் சிறுகதை எழுதுவதில் காண்பிக்கும் திறமையைப் பார்த்தால், அதை அவர்கள் தேசியக் கலையாகக் கருதுகிறார்கள் என்று சொல்லலாம்" என்று குறிப்பிடுகிறார். "அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாகத்தான் சிறுகதை வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று" என்றுவில்லியம் டீன் ஹவெல்ஸ் (William Dean Howells) என்ற மற்றொரு விமர்சகர் கூறியுள்ளார். அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களாக விளங்கும் எட்கர் ஆலன்போ, நத்தானியல் ஹாதான், வாஷிங்டன் இர்விங், ஓஹென்றி ஆகியோர் உலக நாடுகள் அனைத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிறுகதைகள் உலக அளவிலேயே மிகப் புகழ்பெற்றவை ஆகும். மெரிமீ (Merimee), பால்ஸாக் (Balzac), மாப்பசான்(Maupassant) ஆகிய சிறுகதை ஆசிரியர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக உலகத்தினரால் அறியப்பட்டனர். இவர்களில், மாப்பசான்தான் இந்திய மொழிச் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார்.
ரஷ்யாவில் செகாவ் (Chekkov), துர்கனேவ், கொகொல் (Gogol) ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள். இவர்களில் கொகொல் எழுதிய மேலங்கி(Overcoat) புகழ்பெற்ற கதையாகும். இக்கதையை முன்மாதிரியாகக் கொண்டுதான் ரஷ்யாவில் பலர் சிறுகதை படைத்துள்ளனர். அதைக் கருத்தில் கொண்டு, "கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள் எல்லாரும் பிறந்து வந்தோம்" (We all come out from under Gogol’s Overcoat) என்று கூறி, நன்றி பாராட்டுகிறார் துர்கனேவ். கொகொல், ரஷ்யாவில் ‘சிறுகதையின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
இங்கிலாந்தில் ரட்யாட் கிப்ளிங் (Rudyard Kipling), ஆர்.எல்.ஸ்டீவன்சன்(R.L.Stevenson), கதரீன் மான்ஸ்ஃபீல்ட் (Katherene Mansfield), தாமஸ் ஹார்டி(Thomas Hardy), ஜோசப் கான்ராட் (Joseph Conrad), ஹென்றி ஜேம்ஸ் (Henry James), ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joice) போன்றவர்கள் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் ஸ்ட்ரான்ட் (Strand), ஆர்கஸி (Argosy), பியர்சன்ஸ் மேகஸீன் (Pearsons Magazine) என்ற இதழ்கள் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்
தமிழ் மொழியில் அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு வீரமாமுனிவர் (1680-1749) எழுதிய பரமார்த்த குரு கதை என்ற கதை நூல், அவர் காலத்திற்குப் பிறகு, 1822இல் சென்னை கல்விச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. இந்நூல்தான், சில ஆய்வாளர்களால் தமிழின் முதல் சிறுகதை நூலாகச் சுட்டப்படுகிறது. பின்பு கதாமஞ்சரி (1826), ஈசாப்பின் நீதிக்கதைகள் (1853), மதனகாமராஜன் கதை (1885), மயில் இராவணன் கதை (1868), முப்பத்திரண்டு பதுமை கதை (1869), தமிழறியும் பெருமாள் கதை (1869), விவேக சாகரம் (1875), கதா சிந்தாமணி (1876) என்ற கதை நூல்கள் வெளியாயின. பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி, தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிக் கதைகளைத் தொகுத்து, தக்காணத்துப் பூர்வ கதைகள்(1880), திராவிடப் பூர்வ காலக் கதைகள் (1886), திராவிட மத்திய காலக் கதைகள் (1886) என்ற தலைப்புகளில் வெளியிட்டார். தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வந்த தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதை போன்ற கதைகளும் தமிழில் அச்சாயின. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் தொகுத்த விநோத ரச மஞ்சரி என்ற கதை நூல் 1876இல் வெளிவந்தது. இதில் கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம், ஏகம்பவாணன், ஒளவையார் போன்றோர் வரலாறு கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அபிநவக் கதைகள் என்ற கதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் கற்பலங்காரம், தனபாலன், கோமளம், சுப்பைய்யர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்ற ஆறு கதைகள் இடம் பெற்றிருந்தன. இவ்வாறு, தமிழில் சிறுகதை முயற்சிகள் அச்சு வடிவில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிய முடிகின்றது.

தமிழில் மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீனச் சிறுகதை முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல் படைத்து வந்த அ.மாதவையா 1910ஆம் ஆண்டில் இந்து ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு கதையாக 27 சிறுகதைகளை எழுதினார். பின்பு இக்கதைகள் 1912இல் Kusika’s Short Stories என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1924இல், இக்கதைகளில் பதினாறை, மாதவையாவே தமிழில் மொழிபெயர்த்து, குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். சமூகச் சீர்திருத்த நோக்குடன் இக்கதைகளைப் படைத்ததாக மாதவையா அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்ற திரௌபதி கனவு,குழந்தை மணத்தையும், கைம்பெண் கொடுமையையும், அவனாலான பரிகாரம் என்ற கதை வரதட்சணைக் கொடுமையையும் பேசின. மாதவையா, தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பஞ்சாமிர்தம் இதழிலும் தமிழில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். நவதந்திரக் கதைகள், வேணுமுதலி சரித்திரம், மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம், ஸ்வர்ண குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, ரயில்வே ஸ்தானம் என்று பல கதைகளை எழுதியுள்ளார். பாரதியார் கதைகள் சம்பவங்களைப் பேசுகின்றனவே தவிர, இவற்றில் சிறுகதைகளுக்குரிய உணர்ச்சி இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.
வ.வே.சு. யர் 1912ஆம் ஆண்டு, கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட்டார். மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயன், அழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம்என்ற ஐந்து கதைகளில் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையே தமிழின் முதல் சிறுகதையாகப் பல விமர்சகர்களால் சுட்டப்படுகின்றது. வ.வே.சு.அய்யர் இக்கதையில் பாத்திர ஒருமை, நிகழ்ச்சி ஒருமை, உணர்வு ஒருமை என்ற மூன்றையும் சிறப்பாக அமைத்துள்ளதாக இலக்கிய விமர்சகர்கள் கூறுகின்றனர். வரதட்சணைக் கொடுமை இக்கதையின் கருப்பொருளாகும். ருக்மணி என்ற பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. வரதட்சணைப் பிரச்சினை காரணமாக, சாந்தி முகூர்த்தம் தடைபட்டு, கணவனுக்கு வேறு திருமணம் நிச்சயமாகியது. இதனால் ருக்மணி தற்கொலை செய்து கொள்கிறாள். தன் தவற்றை உணர்ந்த கணவன் துறவு பூணுகிறான். ஒரு மரம் இக்கதையைச் சொன்னதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இக்கதை, 1913ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் வெளிவந்தது. வ.வே.சு. அய்யர் காலத்திற்குப் பிறகு நாரண துரைக்கண்ணன், தி.ஜ.ரங்கநாதன் போன்றவர்கள் சிறுகதைகள் படைத்துள்ளனர். நாரண துரைக்கண்ணன் சமுதாயப் பிரச்சினைகளைப் பேசும் கதைகள் பல எழுதியுள்ளார். 1915இல் தொடங்கி, சுமார் 60 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியில் இருந்தார் அவர். தி.ஜ.ர.வின் முதல் சிறுகதை சந்தனக் காவடி ஆகும். இவருடைய புகழ் பெற்ற சிறுகதை நொண்டிக்கிளி ஆகும். கால் ஊனமுற்ற ஒரு பெண், எவரும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்த பின் எடுக்கும் புரட்சிகரமான முடிவே கதையாகும். கதையில், நொண்டிப் பெண்ணின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியத்தைப் பேசும் பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
இவ்வாறு மாதவையா, பாரதியார், வ.வே.சு. அய்யர் போன்றோர் தமிழில் சிறுகதை முன்னோடிகளாகப் போற்றப்படுகிறார்கள்.

மௌனி
லா.ச.ரா.
மு.வரதராசனார்



இக்காலக் கட்டம் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறப்பான காலக் கட்டம் எனலாம். புதுமைப்பித்தன்,கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, மௌனி போன்றவர்களும், கல்கி, ராஜாஜி, கே.எஸ்.வேங்கட ரமணி, சிட்டி, சங்கரராம், லா.ச.ரா. போன்றவர்களும் இக்காலக் கட்டத்தில் சிறுகதை எழுதியுள்ளனர்.
இவர்களில் கல்கி, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும், பின்பு கல்கி இதழிலும் எழுதியுள்ளார்.


கல்கி எழுதியவை, வெகுஜன இதழுக்கு ஏற்ப அமைய, அவருடைய காலக் கட்டத்தில் எழுதிய புதுமைப்பித்தன் கதைகள் வடிவம், உத்தி, உள்ளடக்க முறைகளில் பரிசோதனை முயற்சிகளாக அமைந்து இலக்கிய அந்தஸ்து பெற்ற சிறுகதைகளாகச் சிறந்தன. தமிழ்ச் சிறுகதை முயற்சியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் ஆவார்.மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல்நாட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் படைப்பாக்கத்தை நன்கு அறிந்த அவர், அவற்றை உள்வாங்கிக் கொண்டு, தமது சொந்தப் படைப்பாளுமையைக் கொண்டு அற்புதமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் கேலிக்கதைகள், புராணக் கதைகள், தத்துவக் கதைகள், நடப்பியல் கதைகள் என்று பலவகையான கதைகளைப் படைத்துள்ளார். வறுமையைப் பற்றிப் பொய்க் குதிரை, ஒருநாள் கழிந்தது, பொன்னகரம், துன்பக்கேணி போன்ற கதைகளையும், புராணக் கதை மரபை வைத்துச் சாபவிமோசனம், அகல்யை அன்றிரவு போன்ற கதைகளையும், தத்துவ நோக்கோடு கயிற்றரவு, மகாமசானம், ஞானக் குகை போன்ற கதைகளையும், வேடிக்கை வினோதக் கதையாகக் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதையையும், நாட்டுப்புறக் கதைப் பாங்கோடுசங்குத்தேவனின் தர்மம், வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் ஆளுமையும் மேதைமையும் பின் வந்த படைப்பாளிகளுக்கு முன் மாதிரியாக அமைந்தன எனலாம். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளைப் படைத்து, தமிழ் இலக்கியக் கருவூலத்திற்கு வளம் சேர்த்துள்ளார்.
சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு
சிறுகதையின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவை இதழ்கள். இதழ்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சிறுகதைகளும் புகழ் அடைந்தன; சிறுகதை ஆசிரியர்களும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றனர். எனவே, சிறுகதை இலக்கியத்தில் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது, இதழ்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க இயலாது.
2.4.1 கலைமகள், ஆனந்த விகடன் இதழ்கள்
கலைமகள், ஆனந்த விகடன் என்ற இதழ்கள் முப்பதுகளின் தொடக்கத்தில் தோற்றம் பெற்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆனந்த விகடனை எஸ்.எஸ்.வாசன் 1928இல் தொடங்கினார். சராசரி வாசகர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளால் பரவலாக இவ்விதழ் தமிழ் மக்களால் அறியப்பட்டுப் போற்றப்பட்டது. நல்ல சிறுகதைகள் வெளியிடுவதில் இவ்விதழ் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டியது. ஆனந்த விகடன் தன் அரசியல் கட்டுரைகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், சிறுகதைகளாலும் பெருவாரியான வாசகர்கள் மனங்களில் இடம் பெற்றிருந்தது. ஜெயகாந்தன்சரஸ்வதி போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தாலும், ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய போதுதான், அவர் வெகுஜனக் கூட்டத்தால் அறியப்பட்டார். ஆனந்த விகடன், எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளுக்கும் அவ்வப்போது இடம் கொடுத்து வந்துள்ளது. 1931 முதல் 1941 வரை, பத்தாண்டுக் காலம் விகடனில் கல்கி ஆசிரியராக இருந்த போது, புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். சிறுகதை எழுத்தாளர்களுக்குச் சன்மானம் (ஊக்கத் தொகை) வழங்கும் வழக்கத்தை ஆனந்தவிகடன்தான் முதன்முதலில் கொண்டு வந்தது.
கலைமகள் இதழ் 1932ஆம் ஆண்டு மாத இதழாகத் தோற்றம் பெற்றது. வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையாக இல்லாமல், உயர்ந்த இலக்கியத்திற்கும், சிறப்பான சிறுகதைகளுக்கும் இடமளித்துச் செல்வாக்குப் பெற்றது. நாற்பதுகளில் மணிக்கொடி எழுத்தாளர்களும் இவ்விதழில் எழுதியுள்ளனர். பங்கிம் சந்திரர், சரத் சந்திரர், தாகூர், பிரேம் சந்த், காண்டேகர் ஆகியவர்களுடைய கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கலைமகள் இதழில் வெளிவந்தன. கலைமகளில் எழுதிய எழுத்தாளர்களும், வாசகர்களும் இலக்கியத் தரம் வாய்ந்தவர்களாக அறியப்பட்டனர். கலைமகள் இதழில் எழுதிய எழுத்தாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது.
2.4.2 மணிக்கொடி இதழ்
மணிக்கொடி இதழ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள்கு.சீனிவாசன், தி.ச.சொக்கலிங்கம், வரதராசனார் இவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. வரதராசனார் இதன் ஆசிரியராவார். லண்டனிலிருந்து வெளியான அப்சர்வர் என்ற ஆங்கில இதழைப் போன்று, தமிழிலும் ஓர் இதழ் நடத்த வேண்டும் என்ற முயற்சியின் விளைவே இவ்விதழாகும். இதில்பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். இவ்விதழில் சிறுகதை எழுதும் முறை, சிறுகதை பற்றிய கொள்கைகள், மேனாட்டுச் சிறுகதை முயற்சிகள் இவற்றைப் பற்றிக் கட்டுரைகள் வெளியாகின. இவ்விதழ் தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் நின்று, பின்பு பி.எஸ். ராமையாவை ஆசிரியராகக் கொண்டு மீண்டும் வெளிவந்தது. சிறுகதைக்கான இவ்விதழ், தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தது. இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகளையும் சாகா வரம் பெற்ற சிறுகதைகளையும் வெளியிட்டு இவ்விதழ் சிறப்புப் பெற்றது. அத்துடன் வாசகர்களுக்குச் சிறுகதை பற்றிய முழுமையான உணர்வினை ஏற்படுத்த முயன்றது. உலகின் தரமான சிறுகதைகளைத் தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் கதைகளை மணிக்கொடி இதழ் வெளியிட்டது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி, ஜப்பான் மொழி ஆகியவைகளிலிருந்தும், இந்திய மொழிகளான இந்தி, வங்காளி, மராத்தி மொழிகளிலிருந்தும் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. மணிக்கொடியில் புத்தக மதிப்புரையும், அந்த மதிப்புரையின் மீது விவாதங்களும் இடம்பெற்றன.
சிறுகதைப் படைப்பில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, உலகத் தரமான, எட்டக் கூடிய தரமான எந்நாளும் போற்றக்கூடிய கதைகளை வெளியிட்டுச் ‘சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு சிவிகையாக’ மணிக்கொடி இதழ் சிறந்தது. இதனால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இக்காலக் கட்டத்தைமணிக்கொடிக் காலம் என்று போற்றுகின்றனர்.
பேராசிரியர் சிவத்தம்பி மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிக்கும் போது, அவர்களை மணிக்கொடிக் குழுவினர் என்று சுட்டுகின்றார். ரகுநாதன் மணிக்கொடிப் பரம்பரையினர் என்றும், சிட்டி, சிவபாதசுந்தரம் இருவரும் அவர்களை மணிக்கொடிக் கோஷ்டி என்றும் சுட்டும் அளவு, அவர்கள் இலக்கியத் தரமான சிறுகதைகளைப் படைப்பதில் ஒன்றுபட்டிருந்தனர் எனலாம்.
2.4.3 பிற இதழ்கள்
ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி இதழ்களுக்கு முன்னர். தொடக்கத்தில் விவேக சிந்தாமணி, விவேக போதினி போன்ற இதழ்கள் சிறுகதைகளை வெளியிட்டுச் சிறுகதை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன. அடுத்த நிலையில் மாதவையா ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்நேசன், பஞ்சாமிர்தம் இதழ்கள் நல்ல சிறுகதைகளை வெளியிட்டு வந்துள்ளன. பாரதியார் காலத்தில் சக்கரவர்த்தினி இதழ் சிறுகதை ஆக்கத்திற்குத் துணை நின்றுள்ளது. சுதேசமித்திரன், நவசக்தி, விமோசனம் ஆகிய இதழ்கள் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தினமணி வார வெளியீடு, ஆனந்த போதினி, அமிர்தகுண போதினி, பிரசண்ட விகடன், ஊழியன், சுதந்திரச் சங்கு, காந்தி போன்ற இதழ்களில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்தது. சூறாவளி (1939), பாரத தேவி (1939), கலாமோகினி (1942), கிராம ஊழியன் (1943-1947), சந்திரோதயம் (1954-47), முல்லை (1946), தேனீ (1948) என்ற இதழ்கள் வெளிவந்தன. அவ்வப்போது தோன்றி மறைந்த இவ்விதழ்களும் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்துள்ளன. பின்புசரஸ்வதி, ஹனுமான், சக்தி, எழுத்து போன்ற இதழ்கள் ஐம்பதுகளில் தோற்றம் பெற்றன. அறுபதுகளில் தீபம், இலக்கிய வட்டம், கணையாழி, நடை, கசடதபற, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை, சுவடு, அஃ, வாசகன்கண்ணதாசன் போன்ற இதழ்கள் அவ்வப்போது தோன்றின. அவற்றில் சில மறைந்தன. தீபம், கணையாழி, கண்ணதாசன் இதழ்கள் சிறுகதை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னர் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் குங்குமம், குமுதம், கல்கி, தாய், சாவி, இதயம் பேசுகிறது போன்ற வார இதழ்களும் தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்களின் வாரப் பதிப்புகளும் சிறுகதைகளை வெளியிட்டு வந்தன.சுபமங்களா, காலச்சுவடு, நிகழ், புதிய பார்வை, கவிதாசரண்புதுஎழுத்து,தாமரைசெம்மலர் போன்ற இதழ்களும் சிறுகதை வெளியீட்டில் அக்கறை காட்டி வருகின்றன. இவை தவிர மகளிர் இதழ்களான மங்கை, மங்கையர் மலர், அவள் விகடன், பெண்மணி, சிநேகிதி போன்ற இதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இதழ்கள் தலையாய இடத்தைப் பெற்றுள்ளன எனலாம்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகளின் பங்கு
இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி, சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதேபோலச் சிறுகதைத் தொகுப்பு முயற்சிகளாலும், அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்தது.
அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

1 கருத்து:

  1. மணிக்கொடியில் ஆசிரியராக இருந்தவர் வ.ரா. எனப்பட்ட வ.ராமஸ்வாமி அய்யங்கார்.பாரதியின் வரலாற்றை எழுதியவர்.தகவல் பிழையத் திருத்துங்கள்.நானும் சிவகாசிக்காரன்

    பதிலளிநீக்கு