சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில் விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம் சிறந்து வந்துள்ளது.மரபுக்கவிதை
நற்றமிழ், தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ் போன்ற இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.
பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ் என்பன போன்ற மரபுவழி இலக்கியங்கள் இன்றும் படைக்கப் பெற்று வருகின்றன.
மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப் பெற்றுள்ளது.
புதுக்கவிதை தோற்றம்
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. இந்நூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக் கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் (Free verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது. அவர்தம் பாடுபொருளும் பிறர் இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், லின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன், ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர்.
பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம் ஆண்டுஒளி வெள்ளம் என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார். இவரையடுத்து 1889-இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார்.
இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின.
பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின்ப்யுச்சரிசம், ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம் என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின.
‘விட்மனின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்’ என்பார் மகாகவி பாரதியார். மரபுக் கவிதையில் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும்காட்சிகள் என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.
பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர்.
புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தமிழ்க் கவிதைகளை மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பன போன்ற பெயர்களில் குறிப்பிடுகிறோம்.
ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து எனக் காலந்தோறும் யாப்பு வடிவங்கள் செல்வாக்குப் பெற்றுவந்தன. மேனாட்டுத் தாக்கத்தால் உரைநடை செல்வாக்குப் பெற்ற நிலையில், யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி, வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்காக் கவிதை போன்ற பெயர்களை அவ்வப்போது பெற்று வரலாயிற்று.
பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ முற்றிலுமோ மாறுபட்டுத் தோன்றுவது புதுமை எனப்படும். வழிவழியாக மரபு கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளிலிருந்து மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதை ஆகும். புதுக்கவிதைகள் உருவத்தால் மட்டுமன்றி, உள்ளடக்கம், உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகும்.
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)
என மேத்தா கூறும் புதுக்கவிதை, புதுக்கவிதையின் இலக்கணத்தையும் இயல்பையும் புலப்படுத்தும். இதனை, சாலை இளந்திரையன் உரை வீச்சுஎனக் கூறுவார்.
புதுக்கவிதை வளர்ச்சி
புதுக்கவிதையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள் மிகச் சிலரே. பலர் சமுதாய அவலம் கண்டு அவ்வப்போது கவிதைகள் புனைபவராக உள்ளனர். தனிமனித உணர்வுகளைப் பாடுவதும், நாட்டுப்பற்று, மொழியுணர்வு, பொதுவுடைமை, அநீதியை எதிர்த்தல், பெண்ணுரிமை, தலித்தியம், பகுத்தறிவு என்பனவற்றைப் பாடுதலும் இன்றைய புதுக்கவிதைகளின் நோக்கங்களாக உள்ளன.
மரபுக்கவிதை இயற்றுவது என்பது, பெரும்பாலும் அடித்தட்டு மக்களிடத்தில் இடம் பெறாததாகவே இருந்து வந்துள்ளது. புதுக்கவிதையைப் பொறுத்தவரை பெண்கள், அடித்தட்டு மக்கள், தொழிலாளிகள் எனப் பலரும் படைப்பாளராகி விடுவதனால், தங்களின் உண்மை நிலையையும், வாழ்வியல் சிக்கல்களையும், தாங்கள் எதிர்நோக்கும் தீர்வுகளையும் தெளிவாக எடுத்துக் கூற வல்லவர்களாய் அமைகின்றனர். அவர்தம் புதுக்கவிதைப் படைப்புகளும் அவர்களின் மனநிலையையும் வாழ்வியலையும் படிப்பவருக்கு நன்கு உணர்த்துவனவாகின்றன.
பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக் கவிஞர் பலர் நல்ல பல படைப்புகளை நல்கியுள்ளனர்.
(1) பாரதியார் - வசன கவிதை
(2) ந.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
(3) அப்துல் ரகுமான் - பால்வீதி, சுட்டுவிரல்
(4) வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி
(5) மீரா - கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
(6) நா.காமராசன் - கறுப்பு மலர்கள், நாவல்பழம்
(7) மேத்தா - கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்
(8) வைரமுத்து - இன்னொரு தேசிய கீதம், திருத்தி எழுதிய
தீர்ப்புகள், கொடிமரத்தின் வேர்கள்
(9) சிற்பி - சர்ப்ப யாகம்
(10) அறிவுமதி - நட்புக்காலம்
புதுக்கவிதையை வளர்த்தெடுத்த இதழ்கள்
கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப் புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மணிக்கொடி இதழின் காலகட்டத்திலேயே ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல இடம் பெற்றன.
கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார் ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. 1962-ஆம் ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.
எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.
புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐஎன்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:
(1) ந.பிச்சமூர்த்தி - காட்டுவாத்து
(2) வேணுகோபாலன் - கோடை வயல்
(3) வைத்தீஸ்வரன் - உதய நிழல்
(4) நா.காமராசன் - கறுப்பு மலர்கள்
(5) இன்குலாப் - இன்குலாப் கவிதைகள்
(6) ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
(7) கலாப்ரியா - தீர்த்த யாத்திரை
(8) சி.சு.செல்லப்பா - புதுக்குரல்கள்
(9) தமிழன்பன் - தோணி வருகிறது
(10) வல்லிக்கண்ணன் - அமர வேதனை
(11) ப.கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள்
(12) சி.மணி - வரும் போகும்
புதுக்கவிதை, ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, க-வி-தை போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும் புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. இவை ஒரு வகையில் மரபுவழி யாப்பிலக்கண நூல்களை ஒத்தன எனலாம்.‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது வல்லிக்கண்ணன் எழுதியது. புதுக்கவிதை போக்கும் நோக்கும் என்னும் நூல் ந.சுப்புரெட்டியாரால் எழுதப்பட்டது. புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வைஎன்பது கவிஞர் பாலாவின் படைப்பு. புதுக்கவிதை வளர்ச்சிக்கு இத்தகு நூல்களும் பெரும்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
தமிழ்க் கவிதை காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உட்படப் பலரும் எளிதில் எழுதுவதாகப் புதுக்கவிதை விளங்குகின்றது. பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற கொள்கைவாதிகளும், கவியரங்கம் நிகழ்த்துவோரும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் புதுக்கவிதை நூல்களை வெளியீடு செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்து காணமுடிகின்றது.
நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், தை, நறுமுகை போன்ற காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.
ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.